ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளது. போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்பனை துவங்கப்பட்டு, அவைகள் சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
16 ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னையும் குஜராத்தும் மோத உள்ளது. கடந்த முறையை கோப்பையை வென்ற குஜராத்தும் 4 முறை கோப்பையை வென்ற சென்னை அணியும் தங்களது பலத்தை நிரூபிக்க காத்திருக்கின்றன.
இந்நிலையில் சென்னை அணி 16.5 கோடிக்கு ஏலம் எடுத்த பென் ஸ்டோக்ஸ் நடப்பு சீசனின் முதல் பாதியில் பந்துவீசமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளதாவது, “நான் புரிந்துகொண்ட வரை பென் ஸ்டோக்ஸ் தொடரின் துவக்கத்தில் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார். எனது புரிதல் என்னவென்றால், அவர் போட்டியின் முதல் சில ஆட்டங்களில் அதிகம் பந்துவீச மாட்டார்... சில வாரங்கள் ஆகலாம். எனக்கு 100% உறுதியாகத் தெரியவில்லை, அவரை போட்டியின் ஒரு கட்டத்தில் பந்துவீசச் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்களில் பென் ஸ்டோக்ஸ் 36 போட்டிகளில் பந்துவீசி 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.