ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
இதில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதியாகி இன்று இலங்கையில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதிவருகின்றன. இந்த இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிவருகிறது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திவந்தது. இந்நிலையில், இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து தனது பத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆறு விக்கெட்களை எடுத்தார்.
இதனையடுத்து இந்திய அணி 51 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாட ஆரம்பித்தது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் கலம் இறங்கினர். அவர்களது இணை 6.1 ஓவரில் வெற்றி இலக்கான 51 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தது.
இதில், சுப்மன் கில் 27 ரன்களும், இஷான் கிஷன் 23 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.