பெண்களுக்கான ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் இன்று பிற்பகல் மோதியது.
மகளிர் ஆசியக் கோப்பையின் எட்டாவது தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு லீக் ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
ஏழு நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியாவும் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ரேணுகா சிங் 3 விக்கெட்களை எடுத்தார். ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் சினே ரானா தலா 2 விக்கெட்களை எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 65 ரன்களை மட்டுமே எடுத்தது.
66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி தந்தது. தொடக்க ஆட்டக்காரர் சஃபாலி வர்மா 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உட்பட 51 ரன்களை எடுத்தார். முடிவில் 8.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 71 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் நாயகியாக ரேனுகா சிங் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகியாக தீப்தி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.