இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தானுக்கு இந்தியா 10,000 வெண்டிலேட்டர்களைத் தயாரித்துத் தர முடியும் எனில் பாகிஸ்தான் அந்த உதவியை ஜென்மத்துக்கும் மறக்காது எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் இஸ்லாமாபாத்திலிருந்து பி.டி.ஐ.க்கு அளித்த பேட்டியில், "இந்த இக்கட்டான நிலையில், நிதி திரட்டும் வகையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகளை நடத்தலாம். மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதன்மூலம் கிடைக்கும் நிதியை இரு நாடுகளும் பங்கிட்டுக்கொள்ளலாம். இப்போதே இதனை நடத்த வேண்டும் என்று கூறவில்லை, தற்போதைய சூழல் கொஞ்சம் முன்னேற்றமடைந்தவுடன் துபாயில்கூட இதனை நடத்தலாம்.
முதல் முறையாக இந்தப் போட்டிகளின் முடிவு எந்த ரசிகர்களையும் பாதிக்காது என்று நான் கருதுகிறேன். விராட் கோலி சதம் அடித்தால் நாங்கள் மகிழ்வோம், அதே போல் பாபர் ஆஸம் சதமெடுத்தால் நீங்கள் மகிழ்வீர்கள், களத்தில் என்ன நடந்தாலும் இரு அணிகளுமே வெற்றி பெற்ற அணியாகத் திகழும். இது இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்தும்.
மேலும், இந்த சூழலில் இந்தியா எங்களுக்காக 10,000 வெண்டிலேட்டர்களைத் தயாரித்துத் தர முடியும் எனில் பாகிஸ்தான் அதை ஜென்மத்துக்கும் மறக்காது. ஆனால், இது அரசாங்கங்களின் முடிவு. ஆனால் கிரிக்கெட் போட்டி குறித்த முடிவை நான் முன்மொழிய விரும்புகிறேன். ஷாகித் அப்ரிடி அறக்கட்டளைக்கு நிதி திரட்டியதற்கு யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியரை பலரும் திட்டினர். இது தவறு. இது நாடுகளோ, மதமோ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, மனிதம் பற்றியது" எனத் தெரிவித்துள்ளார்.