ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட துப்பாக்கிச்சூடு வீராங்கனை ராஹி சர்னோபத் சாதனை படைத்துள்ளார்.
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியா தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கிச்சூடு பிரிவில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். அதேபோல், மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகாத் தங்கம் வென்றார். இந்நிலையில், இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர்களில், 10மீ பிரிவில் களமிறங்கிய 16 வயது வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்தது பலரிடமும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ராஹி சர்னோபத், 25 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த நபஸ்வான் யக்பாய்பூன் என்பவரை எதிர்த்து இறுதிப் போட்டியில் களமிறங்கினார். இந்த சுற்றின் முந்தைய சாதனையான 34 புள்ளியில் இருவரும் ட்ராவாகி நிற்க, அதன்பிறகு நடந்த தகுதிச்சுற்றில் சர்னோபத் வெற்றிபெற்றார். இதன்மூலம், ஆசிய போட்டிகளில் துப்பாக்கிசுடும் பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை ராஹி சர்னோபத் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில், உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற 16 வயது சிறுமி மனு பாகெரும் கலந்துகொண்டார். ஆனால், இறுதிப்போட்டி வரை வந்த அவரால், தேவையான புள்ளிகளை பெறமுடியாமல் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால், பலரது எதிர்பார்ப்பு பொய்யானாலும், சர்னோபத்தின் சாதனை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.