எட்க்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடித் தோற்றது. வரலாற்றில் முதன்முறையாக தனது ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் வெற்றிபெற்று சாதனை பெற்றதோடு, எட்க்பாஸ்டன் மைதானம் தனது கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
இதற்கு முன்னர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், இடம்பெற்ற விராட் கோலி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் (ஐந்து டெஸ்ட் போட்டிகள்) விளையாடி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த அவர், இந்தத் தொடரிலும் சிறப்பாகவே ஆடினார். 149, 51 என இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் எடுத்த ரன்களால், டெஸ்ட் தரவரிசையிலும் தற்போது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், விராட் கோலி மீதான நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. போட்டி முடிந்து வீரர்கள் விடுதிக்கு செல்வதற்காக பேருந்தில் காத்திருந்தபோது, அதற்கு முன்பாக நின்றபடி சில இந்திய ரசிகர்கள் விராட் கோலியை பாராட்டும் விதமாக பாடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இங்கிலாந்து ரசிகர்களும் இணைந்துகொள்ள, சிறிது நேரத்தில் அவர்களில் சிலர் விராட் கோலியையும், இந்திய ரசிகர்களையும் கேலி செய்யத் தொடங்கினர். அப்போது அவர்கள், ‘எங்கோ உங்கள் விராட் கோலி போனார். எங்களிடம் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்’ என பாடியது குறிப்பிடத்தக்கது.