பாரிஸில் சர்வதேச விளையாட்டான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த போட்டியில், மகளிர் 10 ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார். மேலும், அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேலே வெண்கலப் பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து, நேற்று (09-08-24) மாலை ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.
இதனை தொடர்ந்து, ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ரா, சுமார் 89.45 மீ தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் 4 வெண்கலப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம் என 5 பதக்கங்களை வென்றியிருந்தது.
இந்த நிலையில், நேற்று மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் நடைபெற்றது. இதில் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸ் மற்றும் இந்திய வீரர் அமன் ஷெராவத் மோதினர். இந்த போட்டியில், 13-5 என்ற கணக்கில் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம், இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம், கிராண்ட்ப்ரீ போட்டிகளில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ள அமன் ஷெராவத், தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.