உலகக்கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில் அனைத்து அணிகளும் பேட்டிங், பவுலிங் என தங்கள் அணியை பலப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணியின் வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்தாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
இங்கிலாந்து மைதானம் என்றாலே பவுன்சர்கள், அதிவேக யாக்கர்கள், ஸ்விங் பவுலிங் என பெரும்பாலும் பவுலர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சமீப காலங்களாக அந்த நிலை மாறி வருகிறது. தற்போது 300+ இலக்கையும் சுலபமாக சேஸ் செய்யும் அளவிற்கு மைதானங்களும், காலங்களும் மாறிவிட்டன. சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 481 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் வரலாற்றில் பெரிய சாதனையை படைத்தது.
2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற 13 ஒருநாள் போட்டிகளில் 3 முறை 350+, 5 முறை 300+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் 350+ ரன்கள் எடுத்துள்ளனர்.
டி20 போட்டிகளில் 200+ ரன்கள் எடுப்பது சுலபமாக மாறியுள்ள நிலையில் 50 ஓவர் போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் போது ஒரு இன்னிங்ஸிலேயே 500+ ரன்கள் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கான இயக்குனர் அளித்த பேட்டியில் 500 என்று போடப்பட்ட ஸ்கோர் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை 60 முறை 150+ ரன்களை ஒரு இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் எடுத்துள்ளனர். அதில் ஒரு முறை மட்டுமே 200 ரன்கள் எடுக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 64 முறை ஒரு இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் 150+ ரன்கள் எடுத்துள்ளனர். 7 முறை 200+ ரன்கள் அடித்துள்ளனர்.
2010-ஆம் ஆண்டு வரை ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 350+ ரன்களை 49 முறையும், 400+ ரன்களை 9 முறையும் எடுத்துள்ளது. 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 350+ ரன்கள் 83 முறையும், 400+ ரன்கள் 11 முறையும் எடுக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக 1987-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 350+ ரன்கள் எடுத்தது. ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக 150+ ரன்களை நியூசிலாந்து வீரர் டர்னர் 1975-ஆம் ஆண்டு எடுத்துள்ளார். டர்னர் அந்த போட்டியில் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 171* ரன்கள் எடுத்தார்.
உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் 2010-ஆம் ஆண்டு வரை 300+ ரன்கள் 34 முறையும், 350+ ரன்கள் 3 முறையும் அடிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 300+ ரன்கள் 48 முறையும், 350+ ரன்கள் 13 முறையும் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது விதிமுறைகள், பவர் ப்ளே, பிட்ச் என பெரும்பாலும் பேட்டிங்குக்கு சாதகமாகவே மாற்றப்பட்டுள்ள காரணத்தால் அதிக ரன்கள் அடிக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் 1999-ல் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது இருந்த மைதானங்களின் தன்மையும், இப்போதைய இங்கிலாந்து மைதானங்களின் தன்மையும் பல மாற்றங்களை சந்தித்துள்ளது.
சமீபத்தில் உலகக்கோப்பை போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் இங்கிலாந்து மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கூறியிருந்தனர். 1999-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடைபெற்றது. அதில் அதிகபட்ச ரன் குவித்தவர் ராகுல் டிராவிட் தான்.
முன்புபோல இங்கிலாந்து மைதானங்கள் இப்போது இல்லை. தற்போது பேட்டிங்கிற்கு சாதமாக உள்ளது. சமீபத்தில் இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போதே 300 ரன்கள் எளிதாக அடிக்கப்பட்டது என்று இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் தெரிவித்திருந்தார்.