இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் கங்குலி உட்பட இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் பலருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், டோனியை ஆலோசகராக நியமித்தால் அது அவர் இரட்டை ஆதாயம் பெறுவதாக அமைந்து விடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை, ஒருவர் கிரிக்கெட் சம்பந்தமான இருவேறு பொறுப்புகளை வகிக்க முடியாது. தோனி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளதால், அவர் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு சஞ்சீவ் குப்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தோனி நியமனம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சட்ட குழுவுடன் ஆலோசிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.