ஐபிஎல் கிரிக்கெட் 2024 இல் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.
இதில், இஷான் கிஷன் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் ப்ரிவிஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, திலக் வர்மா 29 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திய சஹால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அதன்படி தொடக்க வீரரான யஷ்ல்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் குவெனா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை விளையாடிய ரியான் பராக் அதிகபட்சமாக 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து 54 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளோடு ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் தொடங்கி 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 1 வெற்றி முதல் 2 வெற்றி வரை பெற்று புள்ளிப்பட்டியலில் போட்டி போடத் தொடங்கியுள்ளன. ஆனால் 5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளது.