உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி மானு பாகேர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) சார்பில் மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் 10மீட்டர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய ஹரியானாவைச் சேர்ந்த மானு பேகர் எனும் 16 வயது சிறுமி, 237.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த அலீஜன்ந்த்ரா வாஸ்குவேஸ் (வயது 33) 237.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் மிதர்வால் மற்றும் மானு பாகேர் அணி 476.1 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றது. இதன்மூலம், இந்திய அணியின் மானு இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். மானு பாகேருக்கு இதுவே முதல் உலகக்கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
7 பதக்கங்களுடன் இந்திய அணி உலகக்கோப்பை போட்டியின் பதக்கப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.