15 வயது பள்ளி மாணவி, ஒரே நாளில் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
15 வயது பள்ளிச் சிறுமி கோரி காஃப், விளம்பிள்டன் தொடரில் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளார். லண்டனில் தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ், கோரி காஃப்பை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கோரி காஃப் வெற்றி பெற்று வீனஸுக்கு மட்டுமின்றி, உலக டென்னிஸ் ரசிகர்களுக்கே அதிர்ச்சியளித்தார். இந்த ஆட்டத்தின் போது தரவரிசையில் 310 ஆவது இடத்தில் இருந்த கோரி காஃப், இந்த வெற்றியால், தரவரிசையில் 215 ஆவது இடத்திற்கு முன்னேறுவார்.
இந்த வெற்றி குறித்து கோரி காஃப் கூறுகையில், " நான் வெற்றியடைந்த பின் வில்லியம்ஸ் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நானும் அவரிடம் நன்றி தெரிவித்தேன். இந்த மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. ஒரு போட்டியில் வென்றபின், நான் அழுதது இதுதான் முதல் முறை. என்னுடைய உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. நான் வீனஸ் வில்லியம்ஸுக்கு எதிராக ஒவ்வொரு புள்ளி எடுக்கும்போதும் மிகுந்த உற்சாகமடைந்தேன். ஆனால், எனக்கு நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டேன். வெற்றி பெற்ற பின் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" எனத் தெரிவித்தார்.