ஐ.பி.எல் சீசன் 11 வீரர்களுக்கான முதற்கட்ட ஏலத்தில் விற்காமல் போனவர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறீஸ் கெயில். அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபடும் இவரை, ராயல் சேலஞ்சர்ஸ் அணி மீண்டும் தனது அணியில் சேர்த்துக்கொள்ளாததே பெரிய ஏமாற்றமாக இருந்தது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாம்கட்ட ஏலத்தின்மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் இந்தத் தொடரில் பஞ்சாப் அணி களமிறங்கிய முதல் இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெயில் ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கவீரராக களமிறக்கப்பட்ட கிறிஸ் கெயில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், அன்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றார். இந்நிலையில், சன்ரைசெர்ஸ் ஐதராபாத் அணியுடனான போட்டியில் களமிறங்கிய கிறிஸ் கெயில், ருத்ரதாண்டவம் ஆடினார். உலகின் தலைசிறந்த டி20 பவுலரான ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இதில், 11 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 63 பந்துகளில் 104 ரன்கள் அடித்த கிறிஸ் கெயில், கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம், 11ஆவது ஐபிஎல் சீசனில் முதல் சதம் படைத்த சாதனையும் படைத்தார். இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி ஐதராபாத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது.
போட்டி முடிந்தபின் கிறிஸ் கெயில், ‘இந்த சதத்திற்கு காரணம் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சேவாக்தான். தியானம், யோகா செய்யச்சொல்லிய அவரது அறிவுரைகள் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. எனக்கு வயதாகிவிட்டது என்று கூறியவர்களுக்கு இந்த சதத்தின் மூலம் பதில் கூறியிருக்கிறேன். சொந்த மண்ணில் எங்கள் அணி விளையாடும் கடைசி போட்டி இதுதான். இனி அடுத்த மைதானங்களிலும் சிறப்பாக செயல்படவேண்டும். இந்த வெற்றியை நாளை (இன்று) பிறந்தநாள் கொண்டாடும் என் மகளுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என உற்சாகமாக பேசியுள்ளார்.