Skip to main content

இவ்ளோ நாள் எங்கே போனீங்க பசங்களா? - கலாய்ப்புகளுக்கு பதில் சொன்ன வினய்குமார்

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த டி20 போட்டியில், வினய்குமார் வீசிய அந்த கடைசி ஓவரை, மேட்ச் பார்த்த யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டார்கள்.

 

வெறும் 6 பந்துகளுக்கு 17 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற கடினமான சூழலில், கொல்கத்தா அணியின் வினய்குமார் பந்துவீச வந்தார். ஆனால், ஒரு பந்தை மிச்சம் வைத்துவிட்டு வெற்றி இலக்கைவிட கூடுதலாக 2 ரன்கள் சேர்த்து சொந்த மண்ணில் மீண்டும் தனது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை அணி. 

 

Vinay

 

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 36 பந்துகளுக்கு 88 ரன்கள் எடுத்திருந்தார். ஓரளவுக்கு சென்னைக்கு சாதமாக மாறிக்கொண்டிருந்த ஆட்டத்தை 11 சிக்ஸர்கள் அடித்து தலைகீழாக மாற்றினார் அவர். 

 

இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக ஆடினாலும், அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் வேகம் குறைந்தது. ஒருபுறம் தோனி ஆமை வேகத்தில் விளையாட, அவரோடு ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெற்றியின் வேகத்தைத் துரிதப்படுத்தினார். இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி திரில்லாக வெற்றிபெற்றது.

 

 

இந்தத் தோல்வியை அடுத்து சமூக வலைத்தளங்களில் கொல்கத்தா அணியின் பவுலர் வினய்குமார் கலாய்க்கப்பட்டார். ஐந்த ஐபிஎல்லில் மிக மோசமான தொடக்கத்தைத் தந்துள்ள அவர் குறித்து வரும் பதிவுகளுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக வினய் குமார், ‘ஹே பசங்களா... டேக் இட் ஈசி, இது வெறும் விளையாட்டுதான். பெங்களூரு அணிக்கெதிராக 9 ரன்களையும், மும்பை அணிக்கு எதிராக 10 ரன்களையும் அசாதரணமாக நான் கையாண்டபோது நீங்களெல்லாம் எங்கே போனீங்க?’ என பதிவிட்டுள்ளார்.