டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது, 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 நாடுகள் இத்தொடரில் பங்கெடுத்து வருகின்றன. இத்தொடரின் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. இத்தொடருக்கான இறுதிப்போட்டியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. தற்போது கரோனா பரவல் காரணமாக பல டெஸ்ட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டதால், திட்டமிட்டபடி இறுதிப்போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தொடர்களை 'ட்ரா' ஆனதாக கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கான புள்ளிகளைப் பகிர்ந்தளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையானது அணிகளின் இறுதிப்போட்டி வாய்ப்பை பறிக்க கூடியதாக அமைந்துவிடக்கூடாது என்பதால், தரவரிசைப்பட்டியல் அமைக்கப்படும் முறையிலும் அதிரடி மாற்றத்தை ஐசிசி எடுத்துள்ளது.
அதன்படி, புள்ளிகள் மூலம் கணக்கிடப்பட்டு வந்த தரவரிசைப்பட்டியல், அணிகளின் வெற்றி விகிதத்தின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 4 தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வென்று 360 புள்ளிகள் மற்றும் 75 சதவிகித வெற்றி விகிதத்துடன் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாம் இடத்திற்குப் பின்தங்கியுள்ளது.
3 தொடர்களில் விளையாடி 7 வெற்றிகளுடன் 296 புள்ளிகள் மற்றும் 82.2 சதவிகித வெற்றி விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.