ஒரு காலத்தில் சிலருக்கு மட்டுமே இருந்து வந்த சர்க்கரை நோய் இப்போது பலருக்கும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த சர்க்கரை நோய்க்கான காரணங்கள் என்னென்ன, இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர் அருணாச்சலம் விடையளிக்கிறார்.
40 வயது முதல் 60 வயது வரை ரத்தக் கொதிப்பு அல்லது சர்க்கரை நோய் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. ஒரு வகையில் சர்க்கரை நோய் நல்லது என்று நான் சொல்வேன். ஏனெனில், இதுவரை நீங்கள் உங்களிடம் காட்டாத அக்கறையை சர்க்கரை நோய் வந்த பிறகு காட்டுவீர்கள். உணவு மற்றும் வாழ்க்கையின் மீதான உங்களின் கவனம் அதிகரிக்கும். சர்க்கரை நோயின் அளவை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால் 90 வயது வரை வேறு எந்த நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக உங்களால் வாழ முடியும்.
சர்க்கரை நோய் வந்த பிறகு கொழுப்புச் சத்து மற்றும் உடல் பருமன் அதிகரிக்கும். சர்க்கரை நோய் வந்துவிட்டால் நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க ஆரம்பிப்போம். சரியான தூக்கம், அளவான சாப்பாடு, உடற்பயிற்சி, மாதாமாதம் சர்க்கரை அளவை சோதனை செய்துகொள்ளுதல் என்று பல தொடர் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவோம். இவை அனைத்தையும் சரியாகப் பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தக் கொதிப்பு திடீரென்று அதிகரிக்கும் வாய்ப்புண்டு. ஆனால் சர்க்கரை அளவு உங்கள் அன்றாட நடவடிக்கைகளால் தான் மாறும்.
நாம் அதிகம் பயப்பட வேண்டிய நோயல்ல சர்க்கரை நோய். இளம் வயதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டாலும் அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. எதிர்மறை உணர்வுகள் அனைத்துமே நோயை வரவழைக்கும். ஆறு மாதம் தூக்கமில்லாமல் இருந்தால் பெண்களுக்கும், மூன்று மாதம் தூக்கமில்லாமல் இருந்தால் ஆண்களுக்கும் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தண்ணீர் குடிப்பது குறைந்தாலும், பழங்கள் சாப்பிடுவது குறைந்தாலும் சர்க்கரை நோய் வரும்.
மருத்துவரின் அறிவுரைகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எதைச் செய்தாலும் அது தவறு. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு இனிப்பு தான். சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும் நபர்கள் ஓரளவு பழங்கள் சாப்பிடலாம். கிழங்கு சாப்பிடுவதையும் குறைக்க வேண்டும். காபி, டீயில் கூட சர்க்கரை போடாமல் தான் குடிக்க வேண்டும். நடைப்பயிற்சி தான் சர்க்கரையைக் கரைக்க உதவும். நாட்டுச் சர்க்கரை, தேன், வெல்லம் உள்ளிட்ட அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டியவை தான்.