பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கிற உடல் சிக்கலான சிறுநீர் கசிவு பற்றி அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேராசிரியரும் மருத்துவருமான ஸ்ரீகலா பிரசாத் விவரிக்கிறார்.
வயிறுக்கு அழுத்தம் அதிகமாகக் கொடுக்கும்போது பெண்களுக்கு அவர்களை அறியாமல் சிறுநீர் கசிவு ஏற்படும். மனம்விட்டு சிரிக்கும்போதும் இந்தப் பிரச்சனை ஏற்படும். பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் முன் இந்தப் பிரச்சனை ஏற்படுவது சங்கடத்தை ஏற்படுத்தும். சுகப்பிரசவம் நடந்த பெண்களுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களாலும் இது நடக்கிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களை நாம் முழுமையாக ஸ்கேன் செய்கிறோம்.
முழுமையான பரிசோதனைக்குப் பிறகு சிலருக்கு இதற்கான அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அறிவோம். உடல் பருமனைக் குறைத்தாலே இந்தப் பிரச்சனை சரியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்போது அறுவை சிகிச்சை தேவையில்லை. பிரசவத்திற்கு முன்பே சில சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறுநீர் கசிவு ஏற்படாமல் தடுக்கலாம். ஆனால் வேலைப்பளு காரணமாகப் பலர் இதைச் செய்வதில்லை. அந்தப் பயிற்சியைக் காலையில் பால் காய்ச்சும்போது கூட தினமும் செய்யலாம்.
பிறப்புறுப்பை இழுத்துப் பிடித்து ஐந்து வரை எண்ண வேண்டும். இதில் மூச்சு விடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த நேரத்திலும் செய்யக்கூடிய பயிற்சி இது. கல்யாணமான புதிதிலிருந்தே இதைச் செய்யலாம். சிறுநீர் கசிவு ஏற்படும் நேரத்திலும் இதைச் செய்து கசிவைத் தடுக்கலாம்.