கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியலாளரும், அதிக அளவில் விற்ற நூல்களின் ஆசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங்! தனது சக்கர நாற்காலியில் இருந்தபடி அண்டத்தில் உலா சென்றவர் ஸ்டீபன் ஹாக்கிங். ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு, பொதுமக்களின் சிந்தையை ஸ்டீபன் ஹாக்கிங் அளவுக்குக் கொள்ளை கொண்ட, உலகெங்கும் கோடானு கோடி மக்களால் நேசிக்கப்பட்ட வேறொருஅறிவியலாளரை நம்மால் காண முடியாது என்கிறார்கோட்பாட்டு இயற்பியலாளர் மிஷியோ காக்கு.
இந்தப் புகழை காலத்தின் சுருக்கமான வரலாறு:
பெருவெடிப்பிலிருந்து கருந்துளைகள் வரை (A Brief History of Time) ) என்ற 1988-இல் வெளியான நூலின் மூலம் ஹாக்கிங் பெற்றார். இதுவரை ஒரு கோடி பிரதிகளுக்கும் மேல் அந்த நூல் விற்றிருக்கிறது.அறிவியலைப் பொறுத்தவரை விநோதமானஒரு கண்டுபிடிப்புக்காக ஹாக்கிங் என்றென்றும் நினைவுகூறப்படுவார்.
முதல் மைல்கல்
நவீன இயற்பியலின் திருப்புமுனை எங்கு நிகழ்ந்தது தெரியுமா? 1973 இறுதியில் ஹாக்கிங்கின் மூளையின் சுவர்களில் நிகழ்ந்தது! அணுவுலகின் உள்ளே ஆட்சிசெய்யும் குவாண்டம் கோட்பாட்டைக் கருந்துளைகளுக்கு ஹாக்கிங் பொருத்திப் பார்க்க முயன்றபோது அந்தத் திருப்புமுனை நிகழ்ந்தது. நீண்ட நெடிய நேரம் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டு கணக்குகள் போட்டுப்பார்த்த பிறகு, ஹாக்கிங் கண்டுபிடித்த ஒரு விஷயம் அவரையே குழப்பத்தில் ஆழ்த்தியது. கருந்துளைகள் உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை என்று அவர் கண்டறிந்தார். அவற்றிலிருந்தும் ஒருகட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசிய ஆரம்பித்து இறுதியில், வெகு நீண்ட யுகங்களுக்குப் பிறகு, கருந்துளை வெடித்து மறைந்துவிடும் என்று ஹாக்கிங் கண்டறிந்தார்.ஒளி உட்பட எதுவுமே தப்பிக்க முடியாது என்று கருதப்பட்ட கருந்துளைக்குள்ளிலிருந்து அணுத்துகள்கள் தப்பிக்கின்றன என்பதை ஹாக்கிங் உட்பட யாருமே முதலில் நம்பவில்லை.உண்மையில், நான் இந்த விஷயத்தைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. தற்செயலாகத்தான் இதை நான் கண்டறிந்தேன் என்று ஒரு நேர்காணலில் ஹாக்கிங் கூறினார்.
தனது கணிப்பை நேச்சர் இதழில் கருந்துளை வெடிப்புகள்? என்ற தலைப்பில் 1974-இல் கட்டுரையாக எழுதினார் ஹாக்கிங். இயற்கையைப் பற்றிய ஒருங்கிணைந்த ஒற்றைக் கோட்பாட்டை நோக்கிய, அதாவது ஒன்றுக்கொன்று முரண்படும் சார்பியல் கோட்பாட்டையும் குவாண்டம் கோட்பாட்டையும் இணைக்கும் முயற்சியை நோக்கிய பயணத்தில் முதல் மைல்கல் என்று அறிவியலாளர்களால் இந்தக் கட்டுரை புகழப்படுகிறது.ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளைகளைப் பற்றிய கருத்தாக்கங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அழிவுசக்திகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருந்த கருந்துளைகளுக்கு படைப்பு சக்திகள் என்ற அடையாளத்தை, அல்லது மறுசுழற்சி யாளர்கள் என்ற அடையாளத்தை ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு வழங்கியது.கருந்துளைக்குள் யாராவது குதித்தால் என்ன ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். குதித்தவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். கருந்துளைக்குள் குதித்தவரின் உடலைக் கட்டமைத் திருந்த அணுக்களும் திரும்பி வராது. ஆனால், அவருடைய நிறையின் ஆற்றல் திரும்பக் கிடைக்கும். இது ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் பொருந்தும் என்று 1978-இல் ஒரு நேர்காணலில் ஹாக்கிங் கூறினார்.
- ஆங்கிலத்தில் : டெனிஸ் ஓவர்பை
- தமிழில் : ஆசை