பலரும் அதிகம் அறியாத வாட்டர் தெரபி முறை குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விளக்குகிறார்.
ஜப்பானியர்கள் வாட்டர் தெரபி மூலம் நீண்ட நாட்கள் வாழும் அளவுக்குத் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றனர். வாட்டர் தெரபி மூலம் நானும் உடல் எடையைக் குறைத்த பிறகு தான் அதன் மகத்துவம் புரிந்தது. கிராமத்தில் காய்ச்சல் வரும்போது வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து அதை குணப்படுத்துவார்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். காய்ச்சல் வந்தால் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் தண்ணீரும் ஒரு வைத்திய முறையாகப் பயன்படுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் ஓரளவுக்கு சூடாக இருக்க வேண்டும். முகப்பரு பிரச்சனை இதன் மூலம் சரியாகும். குடல் சுத்தமாகும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவங்கள். பசிக்கும்போதும் வெந்நீர் குடிக்கலாம். சில நேரங்களில் தாகத்தைத் தான் நாம் பசி என்று நினைத்துக்கொள்கிறோம். மன அழுத்தத்தாலும் சில நேரங்களில் பசி ஏற்படும்.
குறிப்பிட்ட டயட்டுகளில் இருப்பவர்கள் சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் அருந்தினால் பசி ஏற்படாது. விரதம் இருக்கும்போது அதிக அளவில் தண்ணீர் குடிக்கக் கூடாது. ரம்ஜான் நோன்பு காலங்களில் அதனால்தான் யாரும் தண்ணீர் குடிப்பதில்லை. ஏனெனில் உடலில் இருக்கும் உப்பு வெளியேறி சோர்வு ஏற்படும். இந்த வாட்டர் தெரபி முறையை குறைந்தது பத்து வருடங்கள் நீங்கள் பின்பற்றினால் பல நோய்களிலிருந்து விடுபடலாம்.
நீங்கள் தினமும் குடிக்கும் தண்ணீர் மூன்று முதல் நான்கு லிட்டருக்குள் தான் இருக்க வேண்டும். அதிகமான தண்ணீரும் ஆபத்தை விளைவிக்கும். வாட்டர் தெரபியும், வாட்டர் டயட்டும் வேறு வேறு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.