டைவர்ஸ் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான பார்வைகள் உள்ளன. அதை எப்படி பார்க்க வேண்டும் என்கிற உளவியல் பார்வையை மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அதிகப்படியான சண்டை வருவதற்கான முக்கிய காரணமாக மாமியார் இருக்கிறார். இன்றைய காலத்து பெண்கள் நல்ல முறையில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நல்லபடியாக திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. அதை ஆண்களும் ஏற்றுக்கொண்டு, புரிந்து கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால், மாமியார்கள் அப்படியாக தனது வீட்டிற்கு வரும் மருமகள்களை பார்ப்பதில்லை நடத்துவதுமில்லை. தன் மகனை திருமணம் செய்துகொண்டு தன் வீட்டிற்கு வரும் மருமகள் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தே மருமகள்களை கையாள ஆரம்பிக்கிறார்கள்.
உளவியல் ஆய்வாளர் பிராய்டு கூற்றுப்படி, தன் மகன் மீதான அதீத அன்பை பங்கு போட்டுக்கொள்ள வந்தவளாகவே மருமகளைப் பார்க்கிறார்கள் மாமியார்கள். அதோடு மகன்களை 18 வயதிற்கு மேலும் மைக்ரோ பேரண்டிங் செய்கிறார்கள். அவனின் அன்றாட செயல்பாடுகளில் அதிக அக்கறைகளை அம்மாக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதுவே அவனது திருமண வாழ்க்கை வரை நீடிக்கிறது.
பெரும்பான்மையான அம்மாக்களுக்கு உளவியல் மருத்துவராக நான் சொல்வது இதுதான், “உங்களது பிள்ளைகளை அவர்களாகவே வாழ விடுங்கள்; நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வாழுங்கள்”. ஆனால் பெரும்பாலான அம்மாக்கள் மகனது வாழ்க்கையில் எப்போதுமே தலையிடுகிறார்கள். அவன் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிறகும் தலையிட்டு அவனுக்கு பிரச்சனையாகிறார்கள்.
வெளிநாடுகளில் தனித்துவத்தோடு, தனித்தன்மையோடு தனியாக வாழ பழகுகிறார்கள். ஆனால் இந்தியாவில் குடும்பத்தோடு தான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். அதோடு பெரும்பாலான இந்திய குடும்பங்களில் மகன்களில் வாழ்க்கையில் டைவர்ஸ் நடப்பதற்கு அம்மாக்களே முக்கிய காரணமாகவும் அமைந்து விடுகிறார்கள். தன் மகனையும், மருமகளையும் தனியாக விட்டால் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். ஆனால் மாமியார்கள் தனியாகவும் விடுவதில்லை.
இந்த காலத்து பெண்களுக்கு குடும்ப அரசியல் பண்ணுவதற்கு நேரமே இல்லை. ஏனெனில் அவர்கள் வேலைக்கு போகிறார்கள், புதிய விசயங்களை கற்றுக் கொள்கிறார்கள். பிசியாகவே இருக்கிறார்கள். ஆனால் மாமியார்கள் பழைய ஆட்களாக வேலைக்கு போகாமல் எந்நேரமும் குடும்பத்திற்குள் அரசியல் செய்து கொண்டே இருக்கிறார்கள். மாமியாரை கொடுமைப்படுத்துவதற்கு இந்த கால மருமகள்களுக்கு நேரமே இல்லை. ஆனால், மாமியார்கள் மருமகள்களை கொடுமைப்படுத்துவதற்கே தன் மீத வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
மகன்கள் பெரும்பாலும் அலுவலகங்களில் ஆளுமையாக இருப்பார்கள். ஆனால், வீட்டில் அம்மா பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவிகளுக்கு ஆதரவாக இல்லாமல் போய்விடுகிறார்கள். அல்லது இருவரில் யாருக்கு சார்பாக நிற்பது என்கிற முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். மகன்கள் தான் அம்மாவிற்கு சொல்ல வேண்டும். அம்மா நீ உடன் இருக்கலாம், ஆனால் என் மனைவி என்பவள் தனிப்பட்டவள் அவளை பேசவோ, துன்புறுத்தவோ கூடாது என்பதை மகன்கள் தான் பேச வேண்டும். அதுதான் தீர்வை நோக்கி நகர்த்தும். இல்லையென்றால் மகனின் வாழ்க்கையில் டைவர்ஸ் நடக்கும், அதை பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும்.