Skip to main content

விண்வெளியில் பிரவசம் சாத்தியமா? வாலன்டியர் கேட்கும் நிறுவனம்!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
Baby

 

 

 

பல நூறு நட்சத்திரங்களும், நிலவும், வானமும் மட்டுமே நம்மளவுக்குத் தெரிந்த இந்த வானத்தில், நம் கண்ணுக்கு எட்டாத ஏராளமான அதிசயங்கள் இருக்கின்றன. இதுபற்றித் தீவிரமாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் புதுப்புது கோள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
 

அவைபற்றி வெளியாகும் செய்திகளில் முக்கியமாக எழும் கேள்வி - அந்தக் கோளில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பதுதான். அப்படி விண்வெளியில் வாழ்க்கை நடத்த மனிதர்கள் தயாராகி வரும் இந்தக் காலகட்டத்தில், விண்வெளியில் பிரசவம்பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை முன்னிறுத்தி, அதைச் சாத்தியமாக்குவதற்கான வேலையிலும் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். 
 

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய இதுபோன்ற அரிதான சம்பவங்களை, இன்னும் ஆறு ஆண்டுகளில் சாத்தியப்படுத்திக் காட்டுகிறோம் என்கிறது ஸ்பேஸ் லைஃப் எனும் விண்வெளி ஆராய்ச்சிக்கான நிறுவனம். ‘மனிதன் பலகோள்களில் வாழக்கூடிய ஒரு உயிரினமாக மாறவேண்டும் என்றால், அவனால் விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்ளவும் இயலவேண்டும்தானே?’ என்ற கேள்வியுடன் இந்த ஆராய்ச்சியை ஸ்பேஸ் லைஃப் நிறுவனம் தொடர்ந்து வருகிறது. 
 

Baby

 

 

 

இதுகுறித்து தெரிவிக்கையில், “முதலில் விந்து மற்றும் கருமுட்டைகளை இணைத்து உருவாக்கப்பட்ட கருவை, ஸ்பேஸ் - எம்பிரியோ - இன்குபேட்டர் என்ற கருவியின் மூலம் வருகிற 2021-ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்புவோம். நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த இன்குபேட்டர் மீண்டும் பூமி திரும்பியதும் அதில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவோம். 
 

அதன்பிறகு, 2024-ஆம் ஆண்டு பிரசவத்திற்குத் தயாராகி வரும் பெண்ணைத் தேர்ந்தெடுத்து விண்ணில் 500 கிலோமீட்டருக்கு மேல் விண்கலத்தில் குழந்தைப் பெற வைக்கப்போகிறோம். 24 - 36 மணிநேரம் வரை விண்ணில் நடக்க இருக்கும் இந்த நடைமுறையின் போது உலகத்தரம் வாய்ந்த மருத்துவக்குழு உடனிருக்கும். அங்கு சிறிய தவறுகூட நடக்காமல் இதைப் பார்த்துக்கொள்வோம். இதற்கு நிறைய செலவாகும் என கணக்கிட்டிருக்கிறோம். குறிப்பாக இந்த முயற்சிக்கு தன்னார்வலர்களாக பெண்கள் முன்வரவேண்டும். இதற்கான தேர்வு வருகிற 2022ஆம் ஆண்டு முதல் தொடங்கும்” என தெரிவித்துள்ளது.