Skip to main content

எம்.ஜி.ஆரை  கவுரவிக்க  கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து!

Published on 27/04/2019 | Edited on 17/10/2019

"புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர், புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான். வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான். இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.

 

mgr



எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன். எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணிவிட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

 

mgr



நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்றமூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் எம்.ஜி.ஆர்.
 

mgr



தூய கதராடை அணிந்து, தங்க நிறமேனியுடைய எம்.ஜி.ஆர். சிவந்த கரம் உயர்த்திப் பேசிய பாணியும்உதிர்த்தத்தைகளும்என்றைக்கும்எங்கள் நெஞ்சை விட்டு நீங்காத காட்சியாகும்."புரட்சி நடிகராகவே என்னைக் கழகத்திற்கு அர்ப்பணித்துக் கொள்கிறேன்.கதராடை அணிந்திருந்தாலும், பெரியார் அண்ணா கொள்கைகளுக்காகப் பாடுபடுவேன். கலைஞருடன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் மூலம் பழக்கம் ஏற்பட்டபின் இருவரும் தீவிர நண்பர்களாகி விட்டோம். அதனால் இயக்கக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு வந்திருக்கிறது. என் உடலிலில் ஒருசொட்டு இரத்தம் இருக்கும்வரை, அண்ணாவிற்காகவும், தி.மு.க.விற்காகவும் கடைசிவரை உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்' என்று முழங்கினார்.


-காவ்யா சண்முகசுந்தரம்.