அன்பு, உலக வாழ்வியலின் அடிப்படை. உணர்வது மட்டுமே அதன் சிறப்பு. குழந்தைகள் மட்டுமே உடல் மொழியால் மிக கச்சிதமாக அன்பை வெளிப்படுத்துகின்றனர். நாம் பெரும் சாதனைகள் புரிந்ததாக மனதுக்குள் நினைத்து கொண்டிருப்போம். ஒரு மிக சிறிய உடல் நல குறைவை சந்திக்கும் போது குழந்தைகளை விட பலவீனமான மன நிலையில் இருப்போம். நாம் அனைவரும் மிகவும் அறிந்த புகழ் பெற்ற ஒரு மனிதரின் மனைவி எனக்கு போன் செய்து, அண்ணா வீட்டுக்கு வந்துட்டு போங்கண்ணா உங்க நண்பர் அவரு அழுது எங்களையும் அழவச்சுகிட்டு இருக்காரு என்றார். நான் அதிர்ந்தேன். என் நண்பரைப் பற்றி மிக சுருக்கமாக... தமிழக ஆளுமைகளில் ஒருவர். பரபரப்பாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இவர் என்ன கருத்து சொல்வார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவும். பணக்காரர். அறிவாளி. கலைத்துறை மூலமாக உலகம் முழுக்க அறியப்பட்டவர்.
அவரது பங்களாவில் நுழைந்த நான் வியந்தேன். ஒரு பணியாள் கூட காணவில்லை. வாங்கண்ணா உள்ளதான் இருக்காரு. வரவேற்றார் அவர் மனைவி. நான் உள்ளே நுழைய டாக்டர் வெளியில் வர சரியாக இருந்தது. என்ன ஆச்சு டாக்டர்? புட் பாய்சன்தான்.. சரியாகி விட்டது. குழந்தை மாதிரி சேட்டை செய்யறாரு. என் சின்ன வயசு விளையாட்டு தோழன வர சொல்லி இருக்கேன் வந்தவுடன நீங்க போங்கனு சொல்லி ரெண்டு மணி நேரமா என்ன பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்காரு, அதுதான் உங்களுக்கு போன் செய்து வர சொன்னாங்க. நீங்கதான் அந்த சின்ன வயசு நண்பரா! நன்றி சார் என சொல்லி விட்டு சிட்டாகப் பறந்தார். படுக்கையில் இருந்த என் நண்பரின் கண்களை கூர்ந்து ஆழமாக பார்த்தேன். மரண கலவரம் அவர் கண்களில்.என்ன ஆச்சு? நண்பரே.
பேதி ஆச்சு, இப்ப சரியாகிருச்சு. ஆனா எனக்கு செத்துப்போன அம்மா ஞாபகமாவே இருக்கு. அவங்க என்னை கொஞ்சினது, விளையாண்டது, நான் குளிக்க அடம் பிடிச்சபோது அடிச்சது, என்னை அடிக்கும் போது அவங்க காலையே போய் திரும்ப திரும்ப நான் கட்டிக் கிட்டது, சின்ன வயசுல எனக்கு பேதி ஆனப்ப ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு பல முறை எனக்கு ''ஆய்'' கழுவி விட்டதுன்னு கொஞ்ச காலமாவே அவங்க ஞாபகம் அடிக்கடி வருது, கனவுலயும் அவங்கதான் வராங்க.... செத்துப் போயிடுவேன் போல் தெரியிது. கலங்கிப் போய் பேசினார் அந்த பிரபலம்.
இங்க பாருங்க நண்பரே... இந்த அம்மா நினைப்பு உங்களுக்கு மட்டுமில்ல... எல்லாருக்குமே ஒரு உணர்ச்சி கரமான விசயம்தான். உங்களுக்கு இப்ப உடம்பு ரொம்ப பலவீனமா இருக்கறதுனால அது மாதிரி தோணும். நீங்க அம்மா இருக்கற வரைக்கும் அவங்கள நல்லாதான கவனிச்சுக் கிட்டீங்க. எத்தன பேரு வயசான காலத்துல தாய சரியா கவனிக்காம விட்டுட்டு அப்பறம் அமாவாசைக்கு காக்காவுக்கு சோறு வச்சு கும்பிட்டு கிட்டு இருக்காங்க. நீங்க அந்த விசயத்துல தங்கம் ஆச்சே உங்க மனைவி கூட மாமியார் மேல அவ்வளவு பாசமா இருந்தாங்களே. முழுசா உடம்பு சரியாகட்டும், வாங்க நம்ம ஊரு பக்கம் ஒரு டூர் போயிட்டு வரலாம். நாம சின்ன வயசுல வெளயாண்ட இடம் ஸ்கூலு நம்ம ஆசிரியர்கள் சொந்தக்காரங்க எல்லாரையும் ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்.
உங்க பிள்ளைகள வெளிநாட்டுல இருந்து வர சொல்லுங்க அல்லது நீங்க மனைவியோட கிளம்பி போய் பிள்ளைகள பாத்துட்டு வாங்க. உங்க அம்மா வயசுல உள்ள ஆதரவில்லாத தாய்மார்களா பாத்து பண உதவி வைத்திய உதவி பண்ணுங்க. உங்க கம்பெனில வேலை செய்யுற ஆளுங்களுக்கு சம்பளம் கூட்டி குடுத்து பாருங்க அவங்க சந்தோசப்படுவாங்க... உங்களுக்கும் மன அமைதி கிடைக்கும். உங்க அம்மாவுக்கு செய்யுறதா நினைச்சு நாலு பேருக்கு உதவி செய்யுங்க. நல்லா தூக்கம் வரும் கனவெல்லாம் வராது நண்பரே. இப்போது அவர் என் கண்களை ஆழமாக உற்று நோக்கினார். நான் அந்த அறைக்குள் வந்த போது அவர் கண்களில் இருந்த கலக்கம் இப்போது இல்லை. நோய் வெளியில் இருந்து வருகிறது. ஆரோக்கியம் என்பது மனதுக்குள் இருந்து வருவது. தாய்மையும் அப்படியே. மனதுக்குள் இருந்து வருவது. ஆண் குழந்தைகள் அம்மா மீதும் பெண் குழந்தைகள் அப்பா மீதும் அதிக ஈர்ப்புடன் இருப்பது மறுக்க முடியாத உண்மைதானே.