படர்தாமரை பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வு மருந்துகள் சிகிச்சை முறைகள் குறித்தும் சித்த மருத்துவர் லட்சுமி கீதா விளக்குகிறார்
வியர்வை சுரப்பிகள் இருக்கும் இடங்களில் எல்லாம் பலருக்கு படர்தாமரை ஏற்பட்டு பயங்கரமான அரிப்பு ஏற்படும். அக்குள், கண், தொடை இடுக்குப் பகுதிகளில் இது அதிகம் ஏற்படும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியது. சிலருக்கு கண்களைச் சுற்றி கருப்பாக படர்தாமரை இருக்கும். பாத்ரூமில் பக்கெட் கப்பை பல மாதங்களாக மாற்றாமல் இருந்தாலும் படர்தாமரை பிரச்சனை ஏற்படும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது அந்த கப்பை மாற்ற வேண்டும். கரப்பான் தைலமும் அருகன் தைலமும் சித்த மருத்துவத்தில் படர்தாமரைக்கு சிறந்த மருந்துகளாக விளங்குகின்றன.
படர்தாமரை இருக்கும் இடங்களில் அருகன் தைலம் விட்டு, திரிபலா சூரண தண்ணீரை வைத்து கழுவினால் இந்த பிரச்சனைக்கு சிறப்பான தீர்வு கிடைக்கும். இந்த நோயை ஆரம்பத்திலேயே தடுக்காமல் விட்டால், உடல் முழுவதும் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சித்த மருத்துவரை அணுகி சரியான மருந்துகளைப் பெற வேண்டும். சிலருக்கு விரல் இடுக்குகளில் அரிப்பு அதிகமாக இருக்கும். காலில் அணியும் ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவற்றின் காரணமாக, அதில் படிந்திருக்கும் அதிகமான வியர்வையின் காரணமாக அதிகமான அரிப்பு ஏற்படும்.
உடலில் ஏற்படும் படர்தாமரைக்கு கரப்பான் தைலம் பயன்படுத்தலாம். உடலின் சுத்தத்தை பாதுகாப்பதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். உங்களோடு தங்கியிருப்பவருக்கு படர்தாமரை ஏற்பட்டால் அது உங்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. படர்தாமரை ஏற்பட்டவர்கள் தனியாக ஒரு துண்டு பயன்படுத்துவது பாதுகாப்பானது. துண்டினால் தான் இதுபோன்ற நோய்கள் பெரும்பாலும் பரவுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை துண்டை மாற்றலாம்.
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்து, கடலை மாவு தேய்த்து குளிக்கலாம். அனைத்து தோல் நோய்களுக்கும் முக்கியமான ஒரு மருந்தாக திரிபலா சூரணம் விளங்குகிறது. பாதிக்கப்பட்ட உடலின் செல்களை மறுசீரமைப்பு செய்யக்கூடிய சக்தி திரிபலா சூரணத்திற்கு இருக்கிறது. உடலுக்கு தேவையான சக்தியை இது வழங்குகிறது. திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து உடலைக் கழுவும்போது, பல்வேறு பிரச்சனைகளுக்கு அது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.