நக்கீரன் நலம்’ சேனல் வாயிலாக ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் அவர்களை சந்தித்தோம். பல்வேறு நோய்களைப் பற்றியும் அந்த நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வதைப் பற்றியும் பேசினார். அந்த வகையில் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பதைப் பற்றிய மருத்துவ ஆலோசனைகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
மழைக்காலங்களில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் என்று சொல்லக்கூடிய ஹெச் 1 என் 1 என்ற வைரசின் அறிகுறிகள் மற்றும் அந்த நோயைத் தடுக்கும் முறையைப் பற்றிப் பார்ப்பதோடு யாருக்கெல்லாம் இந்த நோயின் தாக்கம் இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம். இந்த பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உடல் வெப்பத்தை விட குறைவாகத்தான் இருக்கும். ஆனால் உடல் சோர்வு மற்றும் இருமலுடன் கூடிய தொண்டை வலி அதிகமாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் வந்த சிலர் கத்தியை வைத்து தொண்டையை அறுப்பதுபோல் வலிக்கிறது என்று சொல்லுவார்கள். பின்பு அவர்களை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தால் கண்டிப்பாகப் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
சின்னதாகக் காய்ச்சல் வந்தாலும் முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று என்னவென்று பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் அது எதாவது வைரஸ் தொற்றாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் மருத்துவர்கள் ஆலோசனைக்கேற்ப மருந்துகள் உட்கொள்வது நல்லது. பன்றிக் காய்ச்சல் வந்தவர்களின் இருமல்கள் மூலம் தொற்று எளிதாக மற்றவர்களையும் பாதிப்படையச் செய்யும். எனவே இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கை குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நெருக்கமானவர்களுக்கு நல்லது. ஹெச் 1 என் 1 வைரஸ் மற்ற வைரஸ்களைவிட அதிக எடையுடன் இருப்பதால் இருமல் வரும்போது 1 மீ அளவிற்குதான் போகும். அதனால் அந்த தொலைவில் அருகில் யாராவது இருந்தால் அவர்கள் முன்பு கட்டாயம் கை குட்டை பயன்படுத்துங்கள். அடிக்கடி கை கழுவுதல் மூலம் இந்த நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதனால் சானிடைசர் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்வதன் மூலன் அந்த ஹெச் 1 என் 1 வைரஸ் 30 நொடிகளில் இறந்துவிடும்.
இந்த பன்றிக் காய்ச்சல் பெரும்பாலும் ஏற்கனவே உடலில் வியாதி உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்கள், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், புற்றுநோய் பாதிப்பிலுள்ளவர்கள். வயது முதிர்ந்தோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களுக்குப் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் சீக்கிரமாகவும் அதிகமாகவும் காணப்படுகிறது. எனவே ஆரம்பத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்துவிட்டால் சுலபமாக மருத்துவ சிகிச்சையளித்து குணப்படுத்திவிடலாம். அதனால் காய்ச்சல் வந்துவிட்டால் சாதாரண காய்ச்சல் என்று நினைக்க வேண்டாம். உடனடியாக மருத்துவர்களை அணுகினால் எந்தவிதமான வைரஸ் காய்ச்சல் என்று கண்டுபிடித்து குணப்படுத்திவிடலாம் என்றார்.