திபெத் நாட்டு மதத் தலைவரும், அரசுத் தலைவருமான இன்றைய தலாய் லாமா உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். அமைதி, நல்லிணக்கம் தொடர்பாக உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பயிலரங்குகள், உரைகள், கூட்டங்கள் நடத்தி வருகிறார். நல்ல பேச்சாளரான இவர், வசீகரமான தலைவராகப் போற்றப்படுபவர். சார்ந்து வாழ்தலில் தொடங்கி காலநிலை மாற்றம் வரை, இவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி உள்ளது. இவர் திபெத்திய மக்களின் உயர்ந்த மதத்தலைவர் மட்டுமல்ல, உலகளாவிய அரசியல்வாதியும் ஆவார். தியானம் குறித்த ஆராய்ச்சிகளில் பெரும் பங்காற்றியவர். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். முழு உலகின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர். காலநிலை மாற்றம் முதல் குறுங்குழுவாத வன்முறை, சுத்தமான குடிநீர், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு வரை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பலவிதமான பிரச்சினைகளைப் பற்றிப் பேசியுள்ளார்.
இப்போது, உலக மக்கள் அனைவரும் கரோனா கால நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதால், இவரின் வார்த்தைகள் நம்மைச் சரியான பாதையில் கொண்டு செல்ல உதவும்.
கரோனாவினால் கடந்த 2020 ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது. இந்த 2021 ஆம் ஆண்டில் கரோனா தடுப்பூசிகள், உலக நாடுகளில் விநியோகிக்கப்பட்டு வருவது நம் அனைவருக்கும் ஆறுதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் மனதளவிலான பிரச்சனைகளை நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இதன் தாக்கம், தவிர்க்க முடியாத 'நெகடிவ்' சிந்தனைகளைப் பெரும்பாலோனோருக்கு உருவாக்கியுள்ளதை நம்மால் கண் கூடாகப் பார்க்க இயலுகின்றது.
இந்தச் சூழலில், உலக மக்கள் கரோனா காலகட்ட சூழ்நிலைகளை, சிறப்பாகக் கையாள்வதற்குப் புத்தமதத் தலைவர் 14ஆம் தலாய் லாமாவின் 5 சிறந்த அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இரக்கம் குறித்த தலாய் லாமாவின் அறிவுரைகள்!
அகிம்சை, கருணை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவை இன்றைய உலக மக்களின் தேவையாக இருக்கிறது. மனித இயல்பின் அடிப்படையே இரக்கமாகும். பல்வேறு தத்துவ வேறுபாடுகள் கொண்டிருக்கலாம். இருப்பினும், கோபமும் வெறுப்பும் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகின்றன.
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அமைதியாக வாழ சகிப்புத்தன்மை தேவை. சமூகம் மகிழ்ச்சியாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார்.
2. மக்களுக்கு நம்பிக்கையைக் கொண்டு வருவதில் தலாய் லாமாவின் அறிவுரைகள்!
இளைய தலைமுறையினரை வழி நடத்துவதில், அரசியல் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த நவீன காலங்களில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகையாளர்களின் சிறப்பான பங்களிப்பு வேண்டும். அவர்கள், சமூகம் சார்ந்த நல்ல விஷயங்களை மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மக்களை வழிநடத்திச் செல்வதில் அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.
3. மதம் மீது தலாய் லாமாவின் அறிவுரைகள்!
மதம் என்பது பிரார்த்தனைக்கு மட்டுமல்ல. பிரார்த்தனைகளை விட நெறிமுறை நடவடிக்கைக்கும் முக்கியமானது. மனிதர்களாகிய நாம் நமது பூமியை அழித்து, கடல்களைப் பிளாஸ்டிக்கால் நிரப்பினால் மீன் மற்றும் திமிங்கலங்கள் அழிந்து, அதி விரைவில் இவ்வுலகம் பாலைவனமாக மாறும். மேலும், ஏராளமான பசுமை நிற வாயுக்கள் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறினால் புத்தர், அல்லாஹ் அல்லது கிறிஸ்துதான் என்ன செய்ய முடியும். இவற்றை உலக மக்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.
4. ஒற்றுமை மீது தலாய் லாமாவின் அறிவுரைகள்!
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதி. (மனிதர்கள் போன்ற) உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்று; மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்கிற அவசியத்தை உணர்ந்திருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள், மலர்கள் எல்லாமும் இந்தத் தத்துவத்தையே முன் நிறுத்துகின்றன. ''சார்ந்து வாழ்தலில்தான் மனித இனத்தின் இருப்பு அடங்கி இருக்கிறது.” என்கிறார்.
5. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தலாய் லாமாவின் அறிவுரைகள்!
சுற்றுச்சூழல் பேரழிவுகள், சூறாவளிகள், காட்டுத் தீ, பாலைவனமாக்கல் மற்றும் பனிப்பாறை உடைதல் போன்றவை மனித குலத்தின் பொறுப்பற்றத் தன்மையை உணர்த்துகின்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழலை தனி மனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கைச் சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். எனவே, சுற்றுச்சூழல் ஆபத்தின் முழு தீவிரத்தை, உலக மக்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.