சர்க்கரை நோய் குறித்த பல்வேறு தகவல்களை நம்முடன் டாக்டர் அருணாச்சலம் பகிர்ந்து கொள்கிறார். உடல் உழைப்பு அதிகமாக இருந்தாலும், மூன்று வேளை அரிசி சோறு சாப்பிடுகிற விவசாயியாக இருந்தாலும் சர்க்கரை பிரச்சனை எப்படி வரும் என்பதை விளக்குகிறார்.
காலில் ஒரு விரலில் புண் ஏற்பட்டு அழுகி மூன்று நாட்கள் கழித்து நம்மிடம் வந்தார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர். அவருக்கு 10 வருடங்களாக சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. மருத்துவமனையில் அவருடைய குடும்பமே அவருடன் சேர்ந்து படையல் போல் உணவருந்தியது. அப்படி செய்யக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தினோம். சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இவ்வளவு சாப்பிடக்கூடாது என்று அவருக்கும் அறிவுரை கூறினேன். 60 வயதுக்கு மேல் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கூறினேன்.
விரலில் முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு விரலை எடுக்க வேண்டும் என்கிற நிலை வந்தது. உணவினால் சர்க்கரை கூடும் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். சர்க்கரை நோய் இருக்கும் சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது தவறானது. சர்க்கரை அளவைக் கூட்டாமல் சாப்பிடுவது நல்லது. கை, கால் நரம்புகளில் ரத்தம் குறைந்தாலே விரலுக்கு தான் ஆபத்து என்பதை உணர வேண்டும். மூன்று வேளையும் சோறு சாப்பிடும் விவசாயிக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
உணவை எந்த அளவுக்கு சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். 40 வயதுக்கு மேல் 4 இட்லி போதும். 50 வயதில் 3 இட்லியும் 60 வயதில் 2 இட்லியும் போதும். உடல் உழைப்புக்கு ஏற்றவாறு சாப்பிடலாம். காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நிறைய சக்தி கிடைக்கும், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையின் அளவுக்கு ஏற்ப உங்களுடைய உணவை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை அளவு கூடாமல் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் தவறில்லை.