கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் அதை சரி செய்துகொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்தும் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அதில் குறிப்பாகச் சோம்பேறி கண் என்றால் என்ன? அதற்கான மருத்துவம் என்ன என்பதைக் கேட்டோம். அதற்கு அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.
சோம்பேறி கண் என்பது இரண்டு கண்களில் ஒரு கண்ணில் நூறு சதவீதம் பார்வை நன்றாக இருக்கும். மற்றொரு கண்ணில் பார்க்கும் திறன் குறைபாடு ஏற்படும். இதன் பெயர்தான் சோம்பேறி கண் எனப்படும். இது குழந்தைகளுக்கு ஏற்படுகிற பிரச்சனை. இதை அவர்களால் சொல்லக்கூடத் தெரியாது. பெரியவர்கள் தான் கண் மருத்துவரிடம் காண்பித்துப் பரிசோதித்து கண்ணாடி அணிய வேண்டும்.
கண்களைத் திறந்து பார்க்கும்போது இரண்டு கண்களையும் தான் திறந்து பார்ப்போம். ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க மாட்டோம். குழந்தைகளுக்கு அப்படிப் பரிசோதித்தும் பார்க்கக் கூட தெரியாது. அப்படி இரண்டு கண்களில் ஒரு கண் வழியாக மட்டுமே பார்ப்பதால் நமக்கு அந்த ஒரு கண் மட்டும் அதிகம் வேலை செய்யும்; மற்றொரு கண் வேலை குறைந்து மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும்.
தொடர்ச்சியாக இப்படி ஒரு கண் மட்டுமே தெளிவாகத் தெரிவதால் மங்கலாகத் தெரிய வருகிற மற்றொரு கண்ணால் பார்க்கப்படுகிற பிம்பங்களை நமது மூளை எடுத்துக் கொள்ளாது. அப்படியாக மாறி விடுகிற கண்ணைத் தான் மருத்துவத்தில் சோம்பேறி கண் என்கிறார்கள்.
இதை சரி செய்ய கண் மருத்துவரை அணுகி குறைபாடு ஏற்பட்டுள்ள கண்களுக்குத் தகுந்த பவர் உள்ள கண்ணாடியை பரிந்துரைப்பார்கள். அதை வாங்கி பயன்படுத்தும் போது மங்கலாகத் தெரிகிற பிம்பங்கள் அதற்கப்புறம் தெளிவு பெறும்; அதை நமது மூளை ஏற்றுக் கொள்ளும். கண்ணாடி தான் இதற்கு ஒரே தீர்வு. கண்ணாடி வேண்டாம் என்றால் லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.