மூல நோய் குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் டாக்டர் கண்ணன் விளக்குகிறார்.
மூலத்திற்கான மிக முக்கியமான காரணம் மலச்சிக்கல். மலச்சிக்கலுக்கு காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள். நகரங்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோ செய்யும் வேலைகள் தான் இன்று அதிகம். ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வார்கள். ஓட்டுநர்களுக்கும் இதே நிலைமைதான். இவர்களுக்கெல்லாம் மூலம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அது முதலில் மலச்சிக்கலில் ஆரம்பிக்கும்.
காய்கறிகள், பழங்களை அதிகம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் பாதிப்புகள் வரும். பாட்டில்களில் விற்கும் ஜூஸ்களையும் குடிக்கக் கூடாது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் உண்ண வேண்டும். நகரங்களில் நார்ச்சத்து குறைவான உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். மன அழுத்தமும், மலச்சிக்கலுக்கு முக்கியமான காரணம். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். டாய்லெட்டை அதிகம் பயன்படுத்தினாலும் மூலம் ஏற்பட வாய்ப்புண்டு.
அதிக மசாலா சேர்த்த உணவுகளை உண்ணுவதாலும் மலச்சிக்கல் ஏற்படும். தினமும் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். உணவில் மோர், தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது 6 மணி நேரம் நிம்மதியான தூக்கம் வேண்டும். நோயாளிகளின் வரலாற்றை முதலில் நாங்கள் ஆய்வு செய்வோம். ஆசனவாயில் வீக்கம் அல்லது அல்சர் இருக்கிறதா என்று பார்ப்போம். குடலில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா என்று பார்ப்போம். குடலில் கட்டி இருந்தாலும் ரத்தக் கசிவு ஏற்படலாம். அதற்கான சிகிச்சையை நாங்கள் வழங்குவோம்.
வயதானவர்களுக்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வோம். லேசர் டெக்னிக்கைப் பயன்படுத்தி மூலத்தை குணப்படுத்த முடியும். மூலத்திற்கென்று பிரத்தியேக கருவிகள் உள்ளது அதைக் கொண்டு குணப்படுத்தலாம். நோயாளிக்கு வலி ஏற்படாமல் சிகிச்சையை வழங்க முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்களில் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம். மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையின் மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம். அதன் மூலம் மூல நோய் வராமல் தடுக்கலாம்.