எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு ஏராளம். அதை ஏன் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. நம் உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சித்த மருத்துவர் டாக்டர். அருண் விரிவாக விளக்குகிறார்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில எளிய வழிகள் உள்ளன. சிறுநீர், மலம் உள்ளிட்டவற்றை நாம் எப்போதும் அடக்கக் கூடாது. வரும்போது உடனே வெளியேற்றி விட வேண்டும். இவற்றை அடக்கினால் நோய்கள் உருவாகும். சிறுநீரை அடக்கினால் சிறுநீரகத் தொற்று ஏற்படலாம். அதன் மூலம் அடி வயிறு வரை பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவெளியில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகள் அதிகம் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
சிறுநீரைத் தொடர்ந்து அடக்கினால் சிறுநீரகக் கற்கள் வருவதற்கும் வாய்ப்புண்டு. அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்பட்டால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புண்டு. மலத்தை அடக்குவதும் பெரிய பிரச்சனை தான். மலம் என்பது கழிவு. கழிவு வெளியேறினால் தான் அடுத்து நாம் உண்ணும் உணவு உடலுக்குள் சென்று நமக்குத் தேவையான நன்மைகளைச் செய்யும். மலத்தை வெளியேற்றாமல் தொடர்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் வாயுத் தொல்லை ஏற்படும். இதன் மூலம் செரிமானக் கோளாறு ஏற்படும். இருதய அடைப்பு கூட ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
பல நோய்களுக்கு அடிப்படையாக மலத்தை அடக்கும் செயல் இருக்கிறது. காய்ச்சல் வருவதற்கும் இது காரணமாக அமைகிறது. நம்முடைய உயிர் சக்தியை நாம் அதிகம் இழக்கக்கூடாது. வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தாம்பத்தியத்தை விலக்குவதற்கான ஒரு வழியாக இருந்தது. இதனால் உயிர் சக்தி வீணாவது தடுக்கப்பட்டது. அதன் மூலம் உடல் வலு குறைவது தடுக்கப்பட்டு நோய்களும் தடுக்கப்பட்டன.
தண்ணீரை நாம் கொதிக்க வைத்துக் குடித்தால் கிருமிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம். நம்முடைய அன்றாட உணவில் கண்டிப்பாக மோர் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிராக அல்லாமல் மோராக சாப்பிடுவது இன்னும் சிறப்பு. தினமும் குறைந்தது நான்கு வாய் மோர் சாதம் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் கிடைக்கும். நம்முடைய உணவில் கண்டிப்பாக நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். நெய்யில் உள்ள கொழுப்பு உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு தான். இவை அனைத்துமே நாம் எளிமையாக செய்யக்கூடியது தான்.