மனச்சிதைவு நோயை குணப்படுத்தும் முறைகள் குறித்து நமக்கு டாக்டர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.
மனச்சிதைவு நோய் நம்மைச் சுற்றியுள்ள ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவுடன் முதலில் ஒரு ஷாக் ஏற்படும். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையும் இப்போதைய நிலையும் வேறு. இப்போது இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவரை கூட இருந்து கவனித்துக்கொள்ளும் முறை என்பது வெளிநாடுகளை விட இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் மனநலப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு எப்படி நாம் தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோமோ, அதுபோல மனச்சிதைவு நோய்க்கும் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து வந்தால் அது கட்டுப்பாட்டில் இருக்கும். வாக்கிங் செல்லுதல், சரியான தூக்கம் உள்ளிட்ட சில ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளையும், தெரபிக்களையும் பின்பற்ற வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாம் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயமே தெரியாது. அருகில் இருப்பவர்கள் தான் இதைக் கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும்.
ஒருவர் உண்மையிலேயே மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேண்டுமென்றே திமிரில் பேசுகிறாரா என்கிற சந்தேகம் பலருக்கு ஏற்படும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயின் தாக்கத்தால் தான் வித்தியாசமாகப் பேசுகின்றனர். மாத்திரைகள் மட்டுமல்லாது இந்த நோயை குணப்படுத்த ஊசிகளும் இருக்கின்றன. மருந்து சாப்பிட மறுப்பவர்களுக்கு அவர்கள் குடிக்கும் தேநீரில் அல்லது ஜூஸில் அவற்றைக் கலந்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு நாம் செய்யும் நன்மைதான்.
மனச்சிதைவு நோய்க்கான சிகிச்சையைத் தொடங்கிய பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இயல்பான மனநிலைக்கு வருவார்கள். இப்போது மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுபவர்களை அரசாங்கமும், சமூக இயக்கங்களும் கண்டறிந்து மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இந்த நோய் குணமாக வேண்டும் என்றால் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தன்மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒருவர் தனக்கு அருகில் இருந்தால் நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமாகும் வாய்ப்புண்டு.