பயணக் கட்டுரை எழுதுவது என்பது இலக்கியத்தில் ஒரு வகையாகும். தான் சென்ற நாட்டைப் பற்றி, ஊரைப் பற்றி, அங்கே பார்த்த இடங்கள், பழகிய மனிதர்கள், உண்ட உணவுகள் என சுவாரசியமான தகவல்களை அங்கே செல்லாதவர்களுக்கு அறிமுகமாகவும், ஒருவேளை சென்றிருந்தவர்களுக்கு கூடுதல் அரிய தகவலாகவும் சொல்வது என்பது பயண இலக்கிய வரையறைக்குள் வருவது.அப்படியானதொரு பயண கட்டுரைகளை சுமந்து அழகிய முழு வண்ணப்படங்கள் நிறைந்த புத்தகமாக வந்துள்ளது டாக்டர் ந.ராமசுப்ரமணியன் எழுதிய ‘நான் சென்ற சில நாடுகள்’. கல்வியாளர், அரசியல் விமர்சகர், சுற்றுச்சூழல் ஆர்வலர், பொருளாதார நிபுணர், தொழில் அதிபர் என்ற பன்முக ஆளுமையாளர் டாக்டர் ந.ராமசுப்ரமணியன், இவரது மற்றொரு முகமாக அமைந்திருக்கிறது உலகம் சுற்றி வந்த இவரது பயணக்கட்டுரை.
வெளிநாடு சென்று வந்தவர்களை ‘ஃபாரின் ரிட்டன்’ என்று சொல்லும் போது பெருமையாக இருக்கும். எனக்கும் ஒரு முறையாவது ஏதோ ஒரு நாட்டிற்குச் சென்று வரவேண்டும் என்பது ஆசை ஆழமாக இருந்தது. சாதாரண நிலையில் இருந்ததால் நம்மால் முடியுமா என்ற எண்ணமும் இருந்தது. நன்கு படித்து பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிந்துஅதன் வழியாக முதன்முதலாக வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது; அதன் பிறகு தொடர்ந்தது என்பதை சிலாகிக்கிறார் ஆசிரியர்.
யாரும் அதிகம் செல்லாத நாடுகள், அங்கே உள்ள அறிவிய விசயங்கள் என பலவற்றைப் பற்றிய விவரங்களை தகவலாக தந்துள்ளார். வெறும் தரவாக மட்டுமல்லாது அங்கே உள்ள மக்களின் தற்போதைய நிலை, அங்குள்ள கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், பொருளாதார மேம்பாடு, சுற்றுச் சூழலை கையாளும் விதம், நூலகங்களுக்கு, அருங்காட்சியகங்களுக்கு தருகிற முக்கியத்துவம் என பல விசயங்களை புத்தகத்தின் வழியாக பகிர்ந்து கொள்கிறார்.மேலும், போர் நிலவிய நாடுகளின் எதிர்காலம், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் விதம், சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டினர் தருகிற முக்கியத்துவம், பழமையான விசயங்களை போற்றிப் பாதுகாக்கும் விதம், தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் என பல விசயங்களை ஆராய்ந்து நமக்கு படிக்க தருகிறார்.
ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மலைகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், புராதன நினைவு சின்னங்கள், வானளவு உயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான கட்டடங்கள் என எல்லாவற்றையும் பார்த்து அதன் பின்புலத்தையும் தற்போதைய நிலையையும் நமக்கு விளக்கிச் சொல்கிறார். தகவல் களஞ்சியம் போன்ற ஒரு புத்தகமாக காட்சியளிக்கிறது. புத்தகத்தில் சிலநாடுகள் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர், அப்போது இன்னும் பல நாடுகள் மீதம் இருக்கிறது போலும். ஒருவேளை இரண்டாம் பாகமாக வரலாம்.