நம் எல்லார் வீட்டிலும் பெரும்பாலும் மொழி அகராதிகளை வைத்திருப்போம். தமிழ் அகராதி இருக்கிறதோ இல்லையோ ஆங்கில மொழியகராதி கட்டாயம் இருக்கும். தமிழர் வீடுகளில் தமிழ் அகராதியே இராது. ஏனென்றால் தமிழ்ச்சொற்களுக்கு நன்றாகவே பொருள் தெரியும் என்ற நினைப்பு. முதல் வேலையாக ஒரு தமிழகராதி நூலை வாங்கி வைத்துக்கொள்க.
உண்மையில் ஆங்கிலத்தில் நாம் தெரிந்து வைத்துள்ள அளவுக்குக்கூட தமிழ்ச்சொற்களை அறிந்திருக்கவில்லை. நம் பேச்சுக்குப் பயன்படுகின்ற சில நூறு சொற்களுக்கு அப்பாலுள்ள தமிழ்ச் சொற்கள் அறியப்படாமல் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றை அறிவதும் இயன்ற இடங்களில் பயன்படுத்துவதுமே நம்மால் இயல்கின்ற மொழி வளர்ப்பு ஆகும். மொழியைக் காப்பாற்றுவது என்பது அதன் ஒவ்வொரு சொல்லையும் காப்பாற்றுவதுதான்.
என்னிடம் கட்டடப் பணிக்கு வருகின்ற தலைக்கொத்தனார் (மேஸ்திரி) “சப்போஸ்” (Suppose) என்ற ஆங்கிலச் சொல்லைத் தம் பேச்சில் பயன்படுத்துகிறார். அவரோ தொடக்கக்கல்வியளவே படித்தவர். “சப்போஸ் நாளைக்கே செங்கல் விலை ஏறிப்போச்சுன்னா… சப்போஸ் இந்த இடத்துல இன்னொரு ரூம் போட்டா…” என்கிறார். “ஒருவேளை” என்கின்ற சொல் தெரியாமலில்லை. நான் அவ்விடத்தில் “ஒருவேளை அப்படியாச்சுன்னா பார்த்துக்கலாம்…” என்று பயன்படுத்திப் பேசினால் அவர் விளங்கிக்கொள்கிறார். ஆனால், அவருடைய பழக்கத்தில் எங்கோ ஓரிடத்தில் ‘சப்போஸ்’ என்ற சொல்லைக் கற்றுக்கொண்டார். அதைத் தம் பேச்சுமொழியில் ஆள்கிறார்.
சப்போஸ் என்று பயன்படுத்தத் தெரிந்தவர்க்கு ஒருவேளை, ஒருக்கால் என்று வாய்வரவில்லை. இப்படித்தான் சிறிது சிறிதாக தாய்மொழியின் இடத்தை வேற்று மொழி கைப்பற்றிக்கொள்கிறது. தமிழ்ச்சொற்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஓர் எளிய சொல்தான், யாரும் பயன்படுத்தக்கூடியவாறுள்ள பேச்சுத் தமிழ்ச்சொல்தான், அதற்கே இந்நிலை என்றால் தமிழின் அருஞ்சொற்கள் எப்படியெல்லாம் துருவேறிக்கிடக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
எடுத்துக் கூறிய இந்நிகழ்வானது பேச்சுத்தமிழ் மட்டத்தில் கைவிடப்பட்டு வரும் தமிழ்ச்சொற்களைப் பற்றியது. எழுத்துத்தமிழ் என்று இன்னொரு பெரும்பரப்பு இருக்கிறது. அங்கேயாவது தமிழ்மொழி தழைத்தோங்கி நிற்கிறதா? தேடியெடுத்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துகிறார்களா? அரிதினும் அரிதாக ஒரு சொல்லையேனும் புதிதாகக் கற்றுப் பயன்படுத்துவோம் என்று யாரேனும் முயல்கிறார்களா? இந்தப் பொருளில் புதிதாக ஒரு சொல் இருக்க வேண்டுமே, அதைத் தேடியெடுத்து ஆள்வோம் என்ற முனைப்பு யார்க்கேனும் இருக்கிறதா? இதற்குத் தமிழ்ச்சொல் என்ன, அன்றேல் நான் ஆக்குவேன் என்ற ஆக்கச் சிந்தனை உண்டா? இல்லை இல்லை.
எழுத்துத் தமிழின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது. தலைக்கொத்தன் பெரிதாய்ப் படித்தறியாதவன். தன் பேச்சு வழியாய் அறிந்த ஓரிரு சொற்களோடு நிற்கின்றவன். ஆனால், எழுத்தில் ஈடுபடுபவர்கள் யார்? தம் வாழ்வின் பெரும்பகுதியை மொழியோடும் மொழிச்சொற்களோடும் கழிப்பவர்கள். அவர்கள் ஊட்டும் சொல்லும் கருத்தும் தூண்டும் எண்ணமும் வேட்கையுமே குமுகாயத்தை ஆள்கின்றன. அவர்களேனும் புதுப்புதுச் சொற்களை நாடிச் சொல்ல வேண்டாவா ?
புதிய சொற்களை நாடாவிட்டாலும் பழுதில்லை, முடிந்தவரை ஆங்கிலச்சொல் கலவாமல் எழுத வேண்டும்தானே ? அதைக்கூட அவர்கள் செய்வதில்லை. ஓர் ஆங்கிலச் சொல்லைக் கலந்து எழுதுவதில் வணிகக்கதை எழுத்தாளர் முதற்றே புத்திலக்கியம் படைப்பவர்வரை ஒருவரும் கூச்சப்படுவதில்லை. ஆங்கிலம் போன்றே வடமொழி, உருது முதலிய பிறமொழிச்சொற்களும் கலந்திருக்கின்றன.
ஆங்கிலக் கலப்பைக்கூட எளிதில் அறிந்துவிடலாம். வடசொற்கலப்பினை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஐக்கியம், முக்கியம், சகோதரி, நீதி ஆகியன வடசொற்கள் என்றால் பலர்க்கும் அதிர்ச்சியாக இருக்கும். அவை சொற்கட்டுமானத்திலும் ஒலிப்பிலும் தமிழ்போலவே விளங்குவதால் இத்தகைய குழப்பம் ஏற்படுவது இயற்கை. ஆக, இவை அனைத்திற்கும் ஒரேயொரு தீர்வுதான். நம் தமிழ்ச்சொல்லறிவைப் பெருக்கிக்கொள்வது. பேச்சிலும் எழுத்திலும் தமிழ்ச்சொல்லாட்சியை மேம்படுத்துவது.
தொடரின் முந்தைய பகுதி :
தமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #1
தொடரின் அடுத்த பகுதி :
'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #3