சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. கனவுகள் கனவுகளாகவே கலைவதும் நிஜங்களாக நிறைவேறுவதும் கனவு காண்பவரின் திறமையைப் பொறுத்தது. அப்படி திறமையிருந்தால் சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடிகனாகி விடலாம். ஆனால் கலைஞனாவது அத்தனை சுலபமல்ல. ஒரு நடிகனுக்கும் கலைஞனுக்குமான வித்தியாசம் எந்தவொரு அளவுகோலும் வைத்து அளந்துவிட முடியாது. எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் என்று ஒட்டுமொத்த கலைஞர்களையும் தமிழ் சினிமா தன்னுள் வைத்திருந்த காலத்தில் மெலிந்த தேகம், அம்மைத் தழும்பு முகம் என்று சினிமா மொழிக்கு சற்றும் பொருந்தாத ஒரு இளைஞன் தன்னை கலைஞனாக நிலைநிறுத்திக்கொண்டார் என்றால் அது சினிமா உலகின் ஆச்சர்யம். அந்த ஐந்தடி ஆச்சர்யத்தின் பெயர்தான் நாகேஷ்.
நாகேஷ் என்றொரு கலைஞனை சட்டென நினைவுக்குக் கொண்டுவர நகைச்சுவை நடிகர் என்ற பதம் காலம்காலமாக சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நியாயமாக, ""நாகேஷ் ஒரு மிகச்சிறந்தகலைஞர். நகைச்சுவைப் பாத்திரங்களிலும் நடிக்கக்கூடிய நடிகர்'' என்றுதான் பயன்படுத்த வேண்டும். அதுதான் உண்மையும்கூட, ஏனென்றால் அவர் நடிகனாக வேண்டி நகைச்சுவையை தேர்ந்தெடுத்து நடிக்க வரவில்லை. இங்கு காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அப்படி தீர்மானிக்காதிருந்தால் இப்பொழுது "கமல் மாஸ்டர்' என்று மார்க்கெட் போன நடன இயக்குனராக கமல்ஹாசன் இருந்திருப்பார்.
ஒரு நாடக ஒத்திகையில் எவனோ முகம் தெரியாத நடிகர் கம்ப ராமாயண பாடலை தவறாகப்பாடியதைக் கேட்டு அந்த தவறைச் சுட்டிக் காட்டியுள்ளார் நாகேஷ். அதற்காக அங்கு கிடைத்த அவமரியாதையில் தாமும் நடிகனாக வேண்டுமென்று ரயில்வே கல்ச்சுரல் விங்-கின் நாடகக்குழுவில் சேர்ந்தார். பெரிய நடிகனாக வேண்டுமென்று வந்தவருக்கு காலம் கொடுத்தது சிறிய வயிற்றுவலிக்காரன் வேடம். ""அம்மா...அம்மா...அம்மம்மா'' என்று அவர் காட்டிய பிரம்மாண்டத்தில் அரண்டது அரங்கம் மட்டுமல்ல, அன்றைய நாடகத்திற்கு சிறப்பு விருந்திருனராக வந்திருந்த எம்.ஜி.ஆரும்தான். அதுதான் நாகேஷுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். அந்த மாடுலேஷனைதான் "திருவிளையாடல்' தருமியாக ""எனக்கில்லை எனக்கில்லை இல்லவே இல்லை'' என்று மீள்பதிவு செய்திருப்பார். அதையேதான் "கார்மேகம்' படத்தில் வடிவேலுவும் கூட டீக்கடை காட்சியில் கீழே விழும்போது பயன்படுத்தியிருப்பார். கமல்ஹாசன் "தெனாலி' படத்தில் ""ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என்டு சொன்னீங்களே எப்போ ஆரம்பிக்கலாம்'' என்று ஜெயராம் விரலை அசைக்க அசைக்க அதே இழுவையில் இழுத்து இழுத்துச் சொல்லும்போது நாகேஷைத்தான் வெளிப்படுத்திருப்பார். நாகேஷின்றி நகைச்சுவையில் நடிப்பில்லை என்பதற்கு இது சான்று.
ஊறுகாய் கம்பெனி, மில் வேலை, மேடை நாடகம் என்று தட்டுத்தடுமாறி தவழ்ந்து தவழ்ந்து நடிக்க வந்த நாகேஷுக்கு முதல் படம் தாமரைக்குளம். படப்பிடிப்பில் அவர் சரியாக நடிக்கவில்லை என்று யூனிட்டை சார்ந்தவர்கள் கடிந்து கொள்ள மனதளவில் தளர்ந்து போயிருந்த நாகேஷிடம் ""மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன், கவலப்படாம நடி'' என்று எம்.ஆர். ராதா ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளார். கலைஞர் என்று பெயர்கொடுத்த எம்.ஆர். ராதாதான் நாகேஷையும் முதல் படத்திலேயே கலைஞனாக அங்கீகரித்துள்ளார். அந்த தீர்க்கதரிசனம் பொய்த்துப் போகவில்லை.
""சார் நகைச்சுவை இல்லாத இடமே இல்ல சார்'' - இதுதான் இன்றைய ஸ்டான்ட்-அப் காமெடியன்கள் தங்களது பெர்பார்மன்ஸில் பயன் படுத்தும் முதல் வரி. இது நாகேஷுக்கு அப்படியே பொருந்தும். அவர் முகபாவனை, உடல்மொழி, பேச்சு, செயல் என அனைத்திலும் நகைச்சுவை கலந்திருந்தது. பாலச்சந்தருக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவொன்றில் நாகேஷ் கே.பி.எஸ்-ஐ பாராட்டி பேசிக்கொண்டிருப்பார். பேசத்தொடங்கிய சிறிது நேரத்தில் அருகிலிருக்கும் ஒருவர் மைக்கை நாகேஷுக்கு ஏதுவாக அட்ஜஸ்ட் செய்துகொடுப்பார். ""அப்ப இதுவரைக்கும் நான் பேசினது எதும் கேக்கவே இல்லையா?'' என்று தனக்கே உரிய ஸ்டைலில் நாகேஷ் கேட்டதும் அரங்கில் சிரிப்பொலி அதிரும். அவர் அடிக்கடி சொல்வது போல -அதுதான் நாகேஷ்.
தமிழ் சினிமாவில் எந்த சம்பள பாக்கியும் இல்லாமல் வசூல் செய்வதில் கெட்டிக்காரர் நாகேஷ். ஒருமுறை எம்.ஜி.ஆர். படத்திற்காக டப்பிங் பேச யூனிட் ஆட்கள் அழைத்திருக்கிறார்கள். முன்னணி நடிகரான எம்ஜியார் தயாராக இருந்த நிலையில் நாகேஷ் தொண்டை கட்டிக்கொண்டதுபோல பேசியிருக்கிறார் தன்னை அழைக்க வந்தவரிடம். "எம்ஜிஆர் காத்துக்கொண்டிருக்கிறார். இவர் இப்படி செய்கிறாரே' என்று அழைத்துப் போக வந்த நபர் செய்வதறியாது திகைத்த போது, ""ஏம்பா, என்னோட பேலன்ஸ் செக் இன்னும் வரலையே'' என்று சூசகமாக கரகர குரலில் கேட்டிருக்கிறார் நாகேஷ். புரிந்து கொண்ட அவர் அடித்துப்பிடித்து செக்கை கொடுத்ததும் நாகேஷ் வந்து தனது குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். அப்படியொரு கறார் பேர்வழி என்று பெயரெடுத்தவர் அவர். முன்னணி கதாநாயகர்களின் பாடல்கள் அவர்களது பெயர்களோடு ஒலித்து வருவது போல நாகேஷின் பாடல்களும் இன்றும் காற்றில் கலந்திருப்பது அவரது பெருமை. நாகேஷ் ஸ்டைல் டான்ஸ் என்று அவர் உருவாக்கிக்கொடுத்தது தனித்திறமை.
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா', "தாமரைக் கன்னங்கள்', "அவளுக்கென்ன அழகிய முகம்', "ஒருநாள் யாரோ', "நானொரு குமாஸ்தா' போன்ற பாடல்கள் எல்லாம் அழியாத செல்லுலாய்டு ஒலிகள். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்கள் திரைத்துறையில் மின்னிய காலகட்டத்தில் நகைச்சுவையோ குணச்சித்திரமோ தனக்கென ஒரு இயல்பு என்று தமிழ் சினிமாவை தனது நடிப்புக்குள் கட்டிப்போட்டிருந்தவர் நாகேஷ். "நானும் ஒரு பெண்', "மேஜர் சந்திரகாந்த்' போன்ற திரைப்படங்களில் ஒரு அண்ணனாக அவர் காட்டிய உணர்வுகள் இன்றும் அழியா திருக்கின்றன. "திருவிளையாடல்' தருமி ஆகட்டும் "தில்லானா மோகனாம்பாள்' வைத்தி ஆகட்டும் அனைத்துமே நாகேஷுக்காக படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள். குடும்பச் சிக்கல் காரணமாக ஒரு வழக்கில் சிக்கியிருந்த நாகேஷ் எந்த நேரத்திலும் சிறைக்குச் செல்ல நேரிடலாம். அதனால் நாகேஷ் வேண்டாம் என்று தில்லானா மோகனாம்பாள் படக்குழுவினர் சொல்ல, என்ன ஆனாலும் நாகேஷுக்காக காத்திருந்து படப்பிடிப்பு நடத்தப்படும் என்று உறுதியாக இருந்தாராம் இயக்குனர் ஏ.பி. நாகராஜன். காரணம் அன்றைய தினத்தில் வைத்தியை நாகேஷை தவிர வேறு யாராலும் திரையில் கொடுத்துவிட முடியாது என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. "தில்லானா மோகனாம்பாள்' படத்தின் இறுதிக்காட்சியில் நாகேஷ் கைது செய்யப்பட்டதும் பாலையா ""வெக்கங் கெட்டவனே'' என்று சொன்னதும் "எனக்கென்ன வெக்கம். வெக்கப்பட்டா போலீஸ் விட்ருவாளா'' என்று அந்த கதாபாத்திரத்தின் நியாயத்தை அதே இயல்பு மீறாத வசனத்தில் வெளிப்படுத்தியிருப்பார் நாகேஷ். வைத்தியைப் போல, ஓஹோ ப்ரொடக்சன்ஸ் செல்லப்பாவின் கதை சொல்லும் காட்சி இன்றும்கூட தமிழ் சினிமாவின் ரெஃபெரென்ஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.
நாகேஷின் திரைப்பயண பாதையில் அவரை தனியொரு நாயகனாக வடிவமைத்துக் கொடுத்த பெருமை பாலச்சந்தரையே சாரும். பாலச்சந்தருக்கும், நாகேஷுக்குமான நட்பு அத்தனை இறுக்கமானது. பாலச்சந்தர் ஒருமுறை அவர்களது நட்பை குறிப்பிட்டுப் பேசும்போது "என்னுள் இயங்காத நடிகன் நாகேஷ். நாகேஷின் உள் இயங்காத எழுத்தாளன் நான்'' என்று பேசியிருந்தார். அந்த ஆழ்மன புரிதலால்தான் அவர்களது திரைப்படங்கள் இன்றும் கிளாசிக் லிஸ்டில் இருக்கின்றன. பாலச்சந்தர் படப்பிடிப்பில் கமலும் ரஜினியும் சரியாக நடிக்கவில்லையென்றால் ""ராவ்ஜி இருந்தா எப்படி நடிச்சிருப்பான் தெரியுமா'' என்றுதான் அவர்களை திட்டு வாராம். காரணம் பாலச்சந்தரின் ஒவ்வொரு காட்சிப் படிமத்திலும் நாகேஷ் நிறைந்திருந்தார்.
எஸ்.வி.சுப்பையா, சிவாஜி கணேசன் என்று வெகுசில பெரியவர்களால் அணியப்பட்ட பாரதியார் வேடத்தை நாகேஷுக்கு கொடுத்து அழகு பார்த்தார் பாலச்சந்தர். ""கண்ணன் பாட்டை காமுகன் பாடி ஊரைக் கெடுத்தானே, என் பேரைக் கெடுத்தானே'' என்று நாகேஷ் காட்டும் கோபமுகத்தில் ஒரு புதிய பாரதி கண்முன் வருவார். "எதிர்நீச்சல்' படத்தில் ""நான் மாது வந்திருக்கேன்'' என்று நாகேஷ் சொல்வதை இன்று டி.வியில் பார்த்தாலும் கலங்காத கண்கள் நிச்சயம் இருக்க முடியாது. முகம் காட்டாத இருமல் தாத்தாவிடம் பேசும்போதும் சரி, நாயரிடம் அழகும்போதும் சரி, படவா ராஸ்கல் என்று மேஜரை அழைக்க வைக்க சபதம் செய்வதிலும் சரி நாகேஷ் நடிகரல்ல கலைஞன் என்று நிரூபித்திருப்பார். "நீர்க்குமிழி', "சர்வர் சுந்தரம்', "எதிர்நீச்சல்', "புன்னகை', "நவகிரகம்' என அனைத்துமே ஒரு கலைஞனுக்காக நடிப்பிலக்கணம்.
ஒவ்வொரு நடிகனுக்கும் சாச்சுரேஷன் பீரியட் என்று ஒன்று வந்ததும் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும். அப்படி நாகேஷை புறக்கணித்த காலங்களில் தந்தைக்கு சேவகம் செய்யும் மகனைப் போல நாகேஷை தத்தெடுத்து நடிப்புத்தீனி கொடுத்தார் கமல். குரு பாலச்சந்தர் காட்டிய நாகேஷின் சில முகங்களை மீண்டும் திரையில் காண்பித்தார் சிஷ்யன் கமல்ஹாசன், அந்த பாக்கியத்தில்தான் நாகேஷ் இன்றளவில் வாழ்ந்து வருகிறார்.
"நம்மவர்' திரைப்படத்தில் அவரது மகள் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கிடப்பார். மகளின் இறந்த உடலுக்கு தலையணை வைத்து அருகிலமரும் காட்சியில் நாகேஷின் நடிப்பானது, அப்படியொரு காட்சியில் இப்படியும் நடிக்கலாம் என்ற ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கும். அந்த முழு காட்சியிலும் நாகேஷின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும். ""எதுக்கு டாக்டர் அதான் எல்லாம் முடிஞ்சுதே... ஒஹ் எனக்கா'' என்ற வசனத்தில்கூட அந்த காட்சியின் இறுக்கத்தை இலகுவாய் கடத்திச் சென்றிருப்பார். இந்த படத்திற்கு அவருக்கு கிடைத்த தேசிய விருதுகூட அவரது நடிப்புக்கு போதுமான ஒன்றல்ல.
"அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலை தூக்கி வந்ததும் ஸ்க்ரிப்டில் இல்லாத வசனமாக ""என்னயா பாதிதான் இருக்கு'' என்று கேட்டது நாகேஷின் ஸ்பான்டேனியஸ் டச். "மகளிர் மட்டும்' திரைப்படத்தில் பிணமாக நடிக்க வைத்திருந்தபோது தனக்கு வசனம் வேண்டும் என்று குழந்தைத்தனமாக அடம்பிடித்ததைப் பற்றி ஒரு முறை கிரேஸி மோகன் சிலாகித்து பகிர்ந்து கொண்டார். ஒரு நடிகனுக்கு நடிப்பில் ஈடுபாடுதான் முக்கியமே தவிர வேறெதுவுமில்லை என்று அறிந்திருந்ததால்தான் அந்த கதாபாத்திரம் நாகேஷால் சாத்தியமானது. இன்றளவிலும் திரையில் நிலைத்து நிற்கிறது.
பிற்காலத்தில் நல்ல வேடங்களில் நாகேஷை பயன்படுத்திக் கொண்ட மிகச்சில இயக்குனர்களும் இருக்கிறார்கள். "சேரன் பாண்டியன்' படத்தில் தனது பழைய நாரத நடிப்பை மீண்டும் கலர் திரையில் கொண்டுவந்திருப்பார் நாகேஷ்.
ஒரு காட்சியில் விஜயகுமாரிடம், ""இந்தாளு ஒரு கொட்டாய் கட்டியிருக்கானுங்க'' என்று சொல்ல, ""என்ன, கொட்டாயா?'' என்று ஆச்சர்யத்தில் கேட்பார் விஜயகுமார். உடனே நாகேஷ் நையாண்டியாக ""கொட்டாய் உடலீங்க கட்டியிருக்கானுங்க'' என்று அந்தக் காட்சியில் தன்னை முதன்மையில் நிறுத்தியிருப்பார். வேறொரு காட்சியில் ஆனந்த் பாபு காளையை அடக்க, விழுந்ததும் மேடையில் நாற்காலியில் அமைந்திருக்கும் நாகேஷ் மேடையிலிருந்து நாற்காலியோடு குப்புற கீழே விழுவார்.
அந்தக் காட்சியின் பேக்ட்ராப்பில் அப்படி செய்திருக்கத் தேவையில்லையென்றாலும் அவர் டூப் இல்லாமல் அந்த வயதில் அப்படி ரிஸ்க் எடுத்து நடித்திருந்தது அவரது ஈடுபாட்டின் உச்சம். "பூவே உனக்காக' படத்தில் வீட்டுக்குள்ளிருந்து வேகமாகவும், கோபமாகவும் வெளியில் சென்று விஜய்யைப் பார்த்துவிட்டு மீண்டும் அதே வேகத்தோடு வீட்டுக்குள் வந்ததும், சுற்றி இருந்தவர்கள் திகைத்து நிற்க "கதவு மூடியிருக்கானு பாத்தேன். மூடியிருக்கு'' என்று சொல்லுவார் நாகேஷ். வயது முதிர்ந்தாலும் நகைச்சுவைக்கு வயதில்லை என்பதைச் சொல்லும் காட்சியது.
"மைக்கேல் மதனகாமராஜன்', "மகளிர் மட்டும்', "நம்பவர்', "அவ்வை ஷண்முகி', "பஞ்சதந்திரம்', "தசாவதாரம்'- என அவரது ரிட்டயர்மெண்ட் அத்தியாயங்களின் சிரிப்பு பக்கங்கள் கமலால் எழுதப்பட்டிருந்தன. மரணப்படுக்கையில் இருந்த தனக்கு "உங்களுக்கு சரி ஆகிடும் சார், நூறு வருஷம் இருப்பீங்க'' என்று தைரியம் சொன்ன கமலிடம், "டேய் கமலா, பொய் சொல்லாதடா, ரொம்ப நாள் இருக்கமாட்டேன், முட்டாள்களோடு வேல பாத்தவனுக்கெல்லாம் ஆயுசு குறைவுடா'' என்று சொல்லி "உன்கூடயும் வேல பாத்திருக்கேன்ல'' என்று அந்த நிலையிலும் குறும்புத்தனத்தோடு சோகமாய் குழுமியிருந்தவர்களை சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ்.
நாகேஷ் நடிகனல்ல, ஒரு நற்கலைஞன், நடிப்பின் இரு துருவங்களான நகைச்சுவைக்கும் சோக உணர்வுகளுக்கும் அவர் எழுதி வைத்துச் சென்றிருக்கும் விளக்கங்கள் இன்றைய இளம் நடிகர்களுக்கு ஒரு என்சைக்ளோபீடியா என்று சொன்னால் மிகையாகாது.
நன்றி: மணல் வீடு
(மே-2017)