தமிழைப் பிடித்துக்கொண்டு
பிழைத்தவர்கள் தாராளம்-நீ
தமிழை அழைத்துக் கொண்டு
துரத்தியவர்கள் ஏராளம்!
அறியாமைக்கு ஆலயம் உள்ள ஊர்களில்
அறிவுக்கு ஆலயம் எழுப்பினாய் !
தமிழகத்தை ஒளிரச்செய்ததில்
நீ மதிஆதவன் !
உன் கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கோ
நீ மதியாதவன் !
சிலேட்டு அரசியலாளர்களுக்கும்
உன் சிலேடை பிடிக்கும் !
முளைகட்டிய வாா்த்தைகள்
உன் பேச்சில் !
களைகட்டிய தமிழகம்
உன் ஆட்சியில் !
உனை வெறுப்பவர்களும்
உன் எதுகையில் விழுந்திருப்பர் !
உனை மறுப்பவர்களும்
உன் மோனையில் மகிழ்ந்திருப்பர்!
உரைநடையில் நீ வைத்தது
வார்த்தைகள் அல்ல
வாள்!
திரைநடையில் நீ சொன்னது
கலைகள் அல்ல
கலகம்!
உன்னைச் சேராத நதிகள் இல்லை!
ஆனாலும் உன்னில் கலங்கமில்லை!
நீ புரியாத போர்கள் இல்லை!
ஆனாலும் உன்னில் குறைகளில்லை!
கவனத்தைக் குவிக்க வைப்பதே
மஞ்சளின் தொண்டு!
கடமையைச் சொல்லிச் சென்றதே
உன் மஞ்சள் துண்டு!
தென்றலைத் தீண்டியிருக்கிறாய்
தீயைத் தாண்டியிருக்கிறாய்
எல்லார் மனங்களிலும் நின்றிருக்கிறாய்
சென்று வா தலைவா...
செயல் இருக்கிறார்!