Skip to main content

ஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #4 

Published on 21/05/2018 | Edited on 31/05/2018
soller uzhavu title



பொருள் தரத்தக்க ஒரு சொல், வேர்த்தன்மையும் பொருளும் நிறைந்த ஒரு சொற்பகுதி... முன்பின்னாக ஒட்டிக்கொண்டு பத்திருபது சொற்களைத் தோற்றுவித்துவிடும். பெரும்பாலான  மொழிகளின் சொல் தோற்றுவாய் முறைமை அவ்வகையிலேயே அமைந்திருக்கிறது. தமிழுக்குள் நுழைவதற்கு முன்பாக ஆங்கிலத்திலேயே ஒரு நல்லெடுத்துக்காட்டின்வழி இத்தன்மையை விளக்குவது இன்னும் எளிமையாக இருக்கும். ஆங்கிலச் சொற்களின்  தோற்றத்திற்கு அவற்றின் முன்னும் பின்னுமாக ஒட்டும் ஒரேயொரு சொல்லுருபு எப்படிப் பொருள் தருகிறது என்பதைப் பார்க்கலாம். ஆங்கிலத்தின் வழியாக வந்தால்தான் இன்றைய தலைமுறையினர்க்கு எதுவும் எளிதில் விளங்குகிறதாயிற்றே...!

Cent என்னும் இலத்தீனத்து மொழிச்சொல் ஒன்று இருக்கிறது. அச்சொல் ஆங்கிலத்துக்கு ஏற்றுமதியாகிறது. Cent என்றால் “நூறு” என்னும் எண்ணிக்கைப் பொருள். Centi என்றால் “நூற்றின் ஒரு பகுதியான” என்று பொருள். இந்த Cent என்னும் இலத்தீனச் சொல்லுருபை வேராக வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் கைக்கொள்ள முடியாத அளவுக்குச் சொற்களை உருவாக்குகிறார்கள். ஒரேயொரு சொல்லுருபு பத்து, இருபது, முப்பது என்று சொற்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

 

 


Cent என்று முன்னும் பின்னுமாக ஒட்டித் தோன்றும் ஆங்கிலச் சொற்களை நினைவுபடுத்திப் பாருங்கள். Percent என்றால் ‘நூற்றுக்கு இவ்வளவு” என்பது பொருள். அதைத்தான் நாம் ‘விழுக்காடு’ என்கிறோம். Century என்ற சொல் “ஆண்டுகளின் நூற்றுத் தொகுதி”யைக் குறிக்கிறது. நூற்றாண்டு. மட்டைப்பந்தாட்டத்தில் எடுக்கப்பட்ட நூறு ஓட்டங்களுக்கும் அதுவே பெயர். Centurian என்றால் நூற்றினை அடைந்தவர். நூறாம் அகவை வரை வாழ்ந்தவர் என்றாலும், நூறு ஓட்டங்களை அடைந்தவர் என்றாலும் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். நூற்றுக்கால் பூச்சியினங்களை “Centipede” என்று அழைக்கிறார்கள். அமெரிக்க நாணயம் டாலர். ஒரு டாலரின் நூற்றில் ஒரு பங்கு “Cent” என்றே அழைக்கப்படுகிறது. தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவனை “Centum எடுத்திருக்கான்…” என்று பாராட்டுகிறோம். ஒரு மீட்டர் நீளத்தை நூறு பங்காகப் பிரித்தால் ஒவ்வொரு பங்கும் Centimetre. ஒரு இலிட்டரில் நூற்றில் ஒரு பங்கு Centilitre. ஒரு கிராம் நிறுத்தல் அளவையில் நூற்றில் ஒரு பங்கு Centigram.

ஒரேயொரு வேரிலிருந்து எப்படியெல்லாம் பற்பல கிளைச்சொற்கள் தோன்றுகின்றன என்பது இப்போது விளங்குகிறதா ? Centi என்பதற்கு நூற்றில் ஒரு பங்கு என்னும் பொருள் விளக்கம் தெரிந்திருந்தால் ஒரு மீட்டர்க்கு நூறு சென்டிமீட்டரா, ஆயிரம் சென்டிமீட்டரா என்னும் குழப்பமே வராதில்லையா ? ஆங்கிலத்தைக் கற்பிக்கின்ற மேலை நாட்டுப் புலவர் பெருமக்கள் அம்மொழியின் சொல்வேர்த்தன்மையைக் கற்பித்துத்தான் மொழிப்புலமையை ஊட்டுகிறார்கள்.

 

 


ஆங்கிலத்திலேயே இத்தன்மை இருக்கையில் அம்மொழியைவிடவும் தொன்மையான தமிழில் வேர்ச்சொற்களுக்கும் சொல்லுருபுகளுக்கும் பஞ்சமா என்ன? நம் மொழியிலும் கணக்கிலடங்காத வேர்ச்சொற்கள் இருக்கின்றன. ஒரு சொல் எவ்வாறெல்லாம் தோற்றுவிக்கப்படலாம் என்பதற்கும் வரையறுப்புகள் இருக்கின்றன. அவற்றை முறையாக அறிந்துகொண்டால் நம் நினைவெங்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் மணிமணியாக நிரம்பிவிடும். பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொல் தட்டுப்பாடே தோன்றாது. ஒன்றைக் கூற விரும்பினால் பொருத்தப்பான்மை மிக்க நற்சொற்களைப் பயன்படுத்திக் கூறும் ஆற்றல் கைவந்துவிடும். நமக்குத் தெரியாத அருஞ்சொற்களின் எண்ணிக்கை மடமடவெனச் சரியும்.  நாமே புதிதாய் ஒரு சொல்லை உருவாக்கிக் காட்டலாம். அவ்வாறு நாம் உருவாக்கும் சொற்கள் மொழியை வளப்படுத்தும். நாம் சொற்களை உருவாக்குகிறோமோ இல்லையோ, மொழிப்புலத்தில் இருண்மையாகவே இருக்கின்ற இந்தத் தன்மைகள் நமக்குப் பிடிபட்டுவிடும். 

 

தொடரின் அடுத்த பகுதி : 

கலவி தெரியும்... கண்கலவி தெரியுமா? சொல்லேர் உழவு #5

தொடரின் முந்தைய பகுதி:

'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #3