சொல்லறிவு என்னும் திறப்பு
பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் என்று சொல்வார்கள். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் கருத்துகளைச் சொல்வதுதான் முதன்மையாக இருக்குமேயன்றி பிற எவையும் முன் நில்லா. ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே பேச்சு வழக்கில் ஒலிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஒலிப்பின் அழுத்தங்கள் குறைந்து, நுண்மைகள் குன்றி வழுக்கலாய் ஒலிக்கும். பேச்சு மொழியின் பயன் அந்தந்த நேரத்து உரையாடலும் செய்தி தெரிவிப்பதுமே. தேவைக்கேற்ப விரைவுக் குறிப்போடு இருப்பதும் இயல்புதான். எழுத்துத் தமிழானது பேச்சுத் தமிழின் வழுக்கள் அனைத்தையும் நீக்கியதாகத்தான் இருக்கும். எழுத்துத் தமிழைத்தான் 'செந்தமிழ்' என்பார்கள்.
மொழி, இலக்கணம் கூறுகின்ற அனைத்து இயல்புகளுக்கும் உட்பட்டவாறுதான் எழுத்து இருக்க வேண்டும். பேச்சில் தவறாகச் சொல்லப்படுவது குற்றமாகாது. ஆனால், எழுத்தில் எந்தத் தவற்றுக்கும் இடமில்லை. அதனால்தான் இம்மொழியானது எழுத்துத் தமிழில் உறைகிறது. பேச்சுத் தமிழில் உலவுகிறது. எழுத்துத் தமிழில் சங்க காலத்து வழக்குக்கும் அண்மைக் காலத்து வழக்குக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் எளிதில் விளங்குகின்றன. அண்மைக் காலத்து எழுத்துகள் விளங்குகின்றவாறு சங்கச் செய்யுள்கள் விளங்குவதில்லை. அது ஏன் என்றால், அண்மைக் காலத்து உரைநடை எழுத்துகள் தனித்தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்படுகின்றன. சங்கச் செய்யுள்கள் புலமைத் தமிழில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகவே செய்யுள்களைப் பிரித்துப் பதிப்பார்கள். அவ்வாறு பிரித்துப் பதிக்கப்பட்ட செய்யுள்கள் மிக எளிமையாக விளங்கும்.
எடுத்துக்காட்டாக, திருக்குறள்களை எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழில் குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் குறள்களும் நமக்கு விளங்காமல் போயினவா…? இல்லையே. 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'. இந்தக் குறள் படிக்கின்ற எல்லார்க்கும் தெளிவாக விளங்குகிறது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுவதில்லை. விளங்காமைக்கு இடமேயில்லை. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்மையல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவதுதான் நல்லது என்பது அக்குறளின் பொருள். நம் மொழியின் பழைய எழுத்து முறைமையும் இன்றைய எழுத்து வழக்கும் மிகவும் நெருக்கமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு.
சரி, எல்லாக் குறள்களும் இதே தன்மையோடு இருக்கின்றனவா? 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு'. மேற்காண்பதும் குறள்தான். ஆனால், முதலில் சொன்ன நன்றி மறப்பது குறளைப்போல இக்குறள் எளிமையாய் விளங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன ? இக்குறளில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியும், சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. கை, கயவர், உடைக்கும், அல்லாதவர்க்கு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியும். ஈர்ங்கை, கூன்கை, விதிரார், கொடிறு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை. ஆக, நமக்குச் சொற்பொருள் தெரியவில்லை. அதனால் விளங்கவில்லை. அதாவது தமிழில் உள்ள சொற்கள் பலவற்றின் பொருளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதால் அச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள செய்யுள்கள் விளங்கவில்லை.
அச்சொற்களின் பொருள்களைக் கூறுகிறேன். இப்போது விளங்குகிறதா என்று பார்ப்போம். ஈர்ங்கை என்றால் “உணவு உண்டபின் கழுவிய கை” என்பது பொருள். அதாவது எச்சிற்கை. விதிர்தல் என்றால் நடுங்குதல் என்பது பொருள். உதறும் செயலானது கையை நடுங்கச் செய்வதுதானே ? இங்கே விதிரார் என்பதற்கு “உதறார்” என்ற பொருளைக் கொள்ளலாம். அடுத்து கூன்கை. கூன் என்றால் தெரியும், வளைந்துவிடுவது. கூன்முதுகு என்றால் வளைந்த முதுகு. கூன்கை என்பதற்கு வளையும்கை என்று பொருள். ஒருவரை அடிப்பதற்கோ, ஒன்றை உடைப்பதற்கோ கையை வளைத்து வீசவேண்டும். கொடிறு என்றால் கன்னக்கதுப்பு. இப்போது குறளுக்குச் செல்வோம் வாருங்கள். ஈர்ங்கை விதிரார் கயவர் – உணவு உண்டபின் கழுவிய கையைக்கூட கயவர்கள் நடுங்கவிடமாட்டார்கள் / உதறமாட்டார்கள். கொடிறுடைக்கும் – கன்னத்தை உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு – வளைந்து வருகின்ற கைகள் இல்லாதவர்கட்கு. “தம் தாடையைப் பெயர்க்க வளைந்து வந்து அடிக்கும் கைகளை உடையவர்களுக்கு அல்லாது மற்றவர்க்காகத் தாம் உண்ட எச்சிற்கையைக்கூட உதறமாட்டார்கள் கயவர்கள்” என்பது குறளின் பொருள். இப்போது குறட்பொருள் நன்கு விளங்குகிறது.
நம் மொழியிலுள்ள எண்ணற்ற சொற்களின் பொருள்கள் தெரியவில்லை என்பதால்தான் சங்கச் செய்யுள்கள் விளங்கவில்லை. பழகிய ஆயிரம் சொற்களுக்குள்ளாகவே நாம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஏன் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ளக்கூடாது?
அடுத்த பகுதியிலிருந்து (வரும் வெள்ளியன்று) நமக்குத் தெரியாத, நம் மொழியின் சொற்களை சுவாரசியமாக, மகிழ்ச்சியாக, வியப்புகளுடன் அறிந்துகொள்ளப் போகிறோம். 'நாம் தமிழர்' என்று பெருமை கொள்தல் மட்டும் போதுமா? நம் மொழியை அறிய வேண்டாமா... அறிவோமா?
தொடரின் அடுத்த பகுதி :
தமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #2