சொற்களை அறிவதற்கு அகரமுதலிகளைப் புரட்டுவதுதான் தலைசிறந்த ஒரே வழி. அகரமுதலி என்றால் அகராதிதானே என்று கேட்பீர்கள். ஆம். அகராதி என்றாலும் அகரமுதலி என்றாலும் ஒன்றே. “அகர முதல எழுத்து” என்பது ஐயன் வள்ளுவனின் தொடக்கம். அகரத்தைத் தொடக்கமாகக் கொண்ட, அகர வரிசைப்படி அமைக்கப்பட்ட சொற்பொருள் களஞ்சியம்தான் அகராதி. அகரத்தை ஆதியாக – தொடக்கமாகக் கொண்ட நூல் என்பதே அகர ஆதி – அகராதி என்ற சொல்லின் தோற்றுவாய்.
இடைக்காலத்தில் ஆதி என்பது வடசொல் என்று சிலர் கூற முனைந்தனர். செந்தமிழ்ச் சொற்கள் தொகுக்கப்படும் பெருநூலின் தலைப்பிலேயே வடசொல் இருப்பது தகாது என்று கருதிய தனித்தமிழ் அறிஞர் பெருமக்கள் ஆதி என்பதற்கு முதல் என்ற தமிழ்ச்சொல்லை நேராகக் கொண்டனர். அகரத்தை முதலாகக்கொண்ட நூல் என்னும் பொருளில் அகரமுதலி என்று கூறத்தொடங்கினர். இதுதான் அகராதி அகரமுதலி ஆன வரலாறு. என்னுடைய அறியாச் சிறுவத்தில் நான் அகராதிக்கும் அகரமுதலிக்கும் வேறுபாடு தெரியாமல் விழித்திருக்கிறேன். இன்றும் இவ்விரண்டையும் கேட்பவர்கள் அகராதி, அகரமுதலி ஆகிய சொற்களால் தடுமாறி நிற்பதுண்டு. பிற்பாடு தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியாக “ஆதி” என்பதற்கும் தமிழ்வேர்த்தன்மை உண்டு என்று நிறுவினர். திருக்குறளில் இடம்பெற்றுள்ள எச்சொல்லும் பிறமொழிச் சொல் இல்லை, அவை அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களே என்று நிறுவுகின்ற ஆய்வு முடிவுகளும் இருக்கின்றன.
அகராதி எனப்படுகின்ற அகரமுதலியை நாடுவதுதான் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ள நல்ல வழி. ஓர் அகராதியை எப்படி அணுகுவது என்று நான் சொல்வதற்கு முன்னால் தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையைச் செலுத்திவிடுவோம். என்னிடம் எல்லாரும் தவறாமல் கேட்கின்ற வினாக்களில் ஒன்று “ஐயா… நல்ல தமிழ் அகராதியைப் பரிந்துரைக்க முடியுமா…?” என்பதே. ஒரு மொழியில் எழுதப்பட்ட நூல்களில் - இலக்கியமானாலும் சரி, இலக்கணமானாலும் சரி, சொற்பொருள் தொகுப்பானாலும் சரி… காலத்தால் பழையவையே சிறப்பானவை என்பதை முதற்கண் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மொழிப்பிரிவு நூல்களில் காலத்தால் முந்தியவற்றின் தகைமை குறித்து நாம் புதிதாக எதையும் கூற வேண்டியதில்லை.
அகராதியைப் பொறுத்தவரையில் வீரமாமுனிவர் தொகுத்த “சதுரகராதி” என்னும் நூல்தான் காலத்தால் பழையது. அந்நூல் கிபி. 1732இல் வெளியாயிற்று. அதற்கும் முன்பாக எட்டாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிகண்டுகள் எனப்படுகின்ற நூல்கள் தமிழில் தோன்றி வழங்கின. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகியவை முறையே எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. நிகண்டுகள் எனப்படுபவை ஒரு சொல்லுக்கு வழங்கப்படுகின்ற பல பொருள்களையும் ஒரு பொருளுக்கு வழங்கப்படுகின்ற பல சொற்களையும் தொகுத்துக் கூறுபவை. அகராதி என்னும் நூலில் செய்யப்படும் செயலும் அதுதான். அதனால் நிகண்டுகள் என்றதும் அஞ்சி ஒதுங்க வேண்டா.
சதுரகராதி முதற்று அண்மைக்காலத்தில் வெளியாகியுள்ள கிரியா தற்காலத் தமிழ் அகராதி வரைக்கும் ஏறத்தாழ ஐம்பது அகராதி நூல்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. அந்நூல்கள் வெளியான காலம், பொருட்படுத்தத் தக்க வெளியீட்டாளர், தொகுப்பாசிரியர் ஆகியவற்றின் வழியே இவ்வெண்ணிக்கை கொள்ளப்படுகிறது. அண்மைக் காலத்தில் அகராதி தொகுக்கும் முயற்சியில் தனிப்பட்ட ஆர்வலர்கள்தாம் ஈடுபட்டார்களேயன்றிப் பல்கலைக்கழகங்களோ தமிழ் அமைப்புகளோ அரசோ ஈடுபடவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இவற்றிடையே நமக்கு வேண்டிய அகராதி நூல் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் ?
முந்தைய பகுதி:
கலவி தெரியும்... கண்கலவி தெரியுமா? சொல்லேர் உழவு #5
அடுத்த பகுதி: