Skip to main content

"12,000 முறைப் பாடினார்... நம்மாழ்வார் காட்சி தந்தார்" - நாஞ்சில் சம்பத் பேச்சு

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

"SONG 12,000 times...Nammalwar gave a glimpse"- Nanjil Sampad SPEECH

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு அரசியல்வாதியும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "வைணவத்தாலும், சைவத்தாலும் தமிழ் செழுந்தமிழாயிற்று. சங்க காலத்திலிருந்து ஆயிரம் ஆயிரம் புலவர்கள் பாடியும், பரவியும் கொண்டாடிய தமிழ் சமயக் குறவர்களின் சந்தனத் தமிழ் வந்ததற்குப் பிறகு அந்த தமிழ் செழித்தது; கொழித்தது. திருமுறை என்று பேசப்படக்கூடிய சமயக் குறவர்களின் பாட்டு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கண்ணனை, பெருமாளைக் கொண்டாடுகிற ஆழ்வார்களின் பாட்டு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய பக்தி இயக்கத்தை உருவாக்கியுள்ளது. 

 

காவிய கவிஞர் வாலி தான் சொல்லுவார். நூறாயிரம் இருந்தாலும் நாலாயிரம் போல் வருமா என்று. அது என்ன நாலாயிரம்? நாலாயிரம் திவ்யப் பிரபந்தம். 12 ஆழ்வார்கள் பாடியது. பேய் ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட 12 பேர் பாடினார்கள். அது நாலாயிரம் பாட்டு. இது எப்படி கிடைச்சது?

 

ஸ்ரீரங்கநாதமுனினு சொல்லி காட்டுமன்னார்குடியில் ஒருவர் இருந்தார். அவர் தினசரி காலை எழுந்திருப்பார். குளிப்பார்; பெருமாளை சேவிப்பார். இப்படி பெருமாளை சேவிப்பதும் பெருமாளுக்கு மலர் மாலை கட்டுவதும் பெருமாளுக்கு சேவிப்பது பெரும் பாக்கியம் என்று கருதி மனநிறைவுப் பெறுவது தான் அந்த ஸ்ரீரங்கநாதமுனிக்கு அன்றாட செயல். கோவிலில் சேவித்து வருகிறபோது, அவரது காதில் ஒரு குரல் கேட்கிறது. 

 

நாதமுனி காதில் நாதம் போல், வேதம் போல், கீதம் போல் வந்து விழுகிறது. உடனே பரவசப்படுகிறார். இது எங்கிருந்து வந்தது அப்படினு கேட்கிறார். ஒரு 10 பாட்டு இருக்குன்ணு சொல்லி, நம்மாழ்வாரின் 10 பாட்டை சொல்லுகிறார்கள். இன்னும் 990 பாட்டு இருக்கிறது. எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. 990 பாட்டு மட்டும்தானா., இல்லை நாலாயிரம் இருக்கிறது. எங்கு இருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை; தேடுகிறார், தேடுகிறார் நாதமுனி தேடுகிறார். ஓடுகிறார், ஓடுகிறார் ஆழ்வார் திருநகரிக்கு ஓடுகிறார். நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார் திருநகரிக்கு வந்து, அங்கு பாராங்குசர் என்று சொல்லக்கூடிய ஒரு முனிவர் அவரைப் பார்க்கிறார். 

 

அவர் ஒரு பன்னிரண்டு பாட்டை சொல்லிக் கொடுக்கிறார். அப்போது பராங்குசர் சொன்னார் நீ 12,000 தடவை இந்தப் பாடல்களைப் பாடினால் நம்மாழ்வார் உனக்கு காட்சி தருவார். இந்த 12,000 முறை இந்தப் பாடல்களை மனனம் செய்து பக்தியோடு உள்ளம் உருக இறைவனை ஒன்றி , அவனோடு ஐக்கியமாகி அவனோடு கலந்து அவனோடு கரைந்து இந்தப் பாட்டை 12,000 முறை நீ உச்சரித்து ஓதினால் நம்மாழ்வார் உனக்குக் காட்சி தருவார் என்று பராங்குசர் கூறினார். 

 

அப்படியா மனிதனால் முடிகிற காரியமா என்று நாதமுனி யோசிக்கவில்லை. ஒரு இடத்தில் உட்கார்ந்தார். 12,000 முறை அந்தப் பாட்டை உள்ளம் உருகப் பாடினார். பெருமாளை நினைத்து உருகினார்.  கதறி, உருகி 12,000 முறை சொல்லிவிட்டார். நம்மாழ்வார் காட்சித் தந்தார்" என்று குறிப்பிட்டார்.