Published on 07/02/2022 | Edited on 07/02/2022
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சணமங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவரத்ன சாய்பாபா கோவிலில் கடந்த 2ம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தன பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமங்கள், யாக பூஜைகள், யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின் புனித நீரை சுமந்து வந்த வேத விற்பன்னர்கள், கோபுரம், செந்தூர கணபதி, கயிலை பார்வதி பரமேஸ்வரர், நவரத்ன சாய்பாபா, செந்தூர ஆஞ்சநேயர் ஆகிய சன்னதி கலசங்களில் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் சணமங்கலம், எம். ஆர். பாளையம், பி.கே.அகரம், பாடலூர், திருப்பட்டூர், பெரக்கம்பி, எதுமலை உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.