சிலருக்குக் கிடைக்கவேண்டிய சொத்துகள் இறுதி நேரத்தில் கிடைக்காமல் போய்விடுகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு ஜோதிடரீதியான காரணத்தையும், பரிகாரத்தையும் இங்கு காணலாம்.ஜாதகத்திலிருக்கும் 2-க்கு அதிபதியும், 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்து பற்றிக் குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியாக இல்லையென்றால் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும். முக்கியமாக 4-க்குரிய கிரகம் நீசமடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு சேரவேண்டிய வாகனம், வீடு, நிலம், பூர்வீக சொத்து ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்.
2-ஆம் அதிபதி கெட்டுப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 2-ல் நீச செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ சொத்தில் வில்லங்கம் உண்டாகும்.ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக அல்லது பலவீனமாக அல்லது பாவ கிரகத்துடன் இருந்தால், அவருக்கு நகைகள், அலங்காரப் பொருட்கள் வந்து சேர்வதில் சிக்கல் உண்டாகும்.ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2-க்கு அதிபதியாகி பலவீனமாக இருந்தால் நோயின் காரணமாக சொத்தை இழக்கவேண்டிய சூழல் உண்டாகும். நெருக்கமான உறவினரே அவரை ஏமாற்றிவிடுவார். ஜாதகத்தில் 4-க்கு அதிபதி பலவீனமாக இருந்து, பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல வீடு அமையாது. அப்படியே வீடு அமைந்தாலும், அதில் தோஷமிருக்கும் அல்லது அவருடைய சொத்து கைநழுவிச் சென்றுவிடும். தசா காலங்கள் சரியில்லாமலிருந்தால், தற்போது இருக்கும் சொத்தையே இழக்கவேண்டியதிருக்கும். 4-க்கு அதிபதி 12-க்கு அதிபதியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால், அவருடைய பிறந்த ஊரிலுள்ள சொத்தில் பிரச்சினைகள் ஏற்படும். வெளியே சென்று சொத்து சம்பாதித்திருந்தாலும் சிக்கல்கள் உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் 4-ல் சூரியன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர் தன் சொத்துகளை அனுபவிக்கமுடியாது. அவருடைய சொத்து அவருக்குக் கிடைக்காத வகையில் பிறர் ஏமாற்றுவார்கள். அதே ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்தால், அதிலும் குறிப்பாக 3-ஆம் வீட்டில் சேர்ந்தால், சகோதரர்கள் சொத்துகளை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் 11-ல் உச்சமாக இருந்து, 12-ல் செவ்வாய், சனி இருந்தால், ஜாதகர் தன் பேராசை குணத்தால் ஏமாந்துவிடுவார். தனது சொத்து அவருக்குக் கிடைக்காது. 12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், பூர்வீக சொத்து கைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.
4-ல் சனி, 7-ல் செவ்வாய், 12-ல் ராகு இருந்தால், வரவேண்டிய குடும்பச் சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும். 8-ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் இருந்தால், தந்தைவழியில் வரவேண்டிய சொத்து கிடைக்காது. 4-க்கு அதிபதி நீசமடைந்து, 8-ல் பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது 8-ஆம் அதிபதியுடன் இருந்தால், அவருக்கு வரவேண்டிய சொத்து கிட்டாது.
பரிகாரங்கள்
செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றி வந்து வணங்கவேண்டும். செவ்வாயின் "ஓம் அங்க் அங்காரகாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
தினமும் அரசமரத்திற்கு நீரூற்றி,சுற்றிவர வேண்டும். சனிக்கிழமைகளில் அரசமரத்திற்கு தீபமேற்றி வைப்பது நல்லது.
தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நீர் வார்ப்பது சிறந்தது.
முன்னோர்களின் கடவுளை வழிபடவேண்டும்.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். தேவையற்ற பொருட்களை வீட்டில் சேர்த்து வைக்கக்கூடாது. படுக்கையறையில் செருப்பை விடுவது நல்லதல்ல. படுக்கையை காலால் உதைப்பதும் தவறு.
ஞாயிற்றுக்கிழமை மாலை பைரவர் சந்நிதிக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், சொத்து விஷயங்களிலிலிருக்கும் தோஷங்களும் பிரச்சினைகளும் நீங்கும். வரவேண்டிய சொத்துகள் நிச்சயம் தேடிவரும்.