புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (14.07.2024) பூச்சொரிதல் விழா நடந்தது. கிராமத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், கிராமத்தினர் மேளதாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வந்து அம்மனுக்கு மலரபிஷேகம் செய்தனர்.
அதே போலச் செண்டை மேளம், டிரம்ஸ் வானவேடிக்கைகளுடன் வாகன உரிமையாளர்கள் வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இரவு கரகாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை நாலாஞ்சந்தி கருப்பர் உள்படக் கிராமத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்து வரும் 21ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது.
அதன்படி வரும் 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பொங்கல் திருவிழாவும் 29 ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா நாட்களில் பகலில் அன்னதானமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.