கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், பார்த்தாலே பலன் தரக்கூடிய விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"பார்த்தாலே பலன் தரக்கூடிய விஷயங்கள் பற்றி இன்று பார்ப்போம். அபிஷேகம், ஆராதனை போன்ற விஷயங்களைச் செய்யாமல் சில பொருட்களை சாதாரணமாக பார்த்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும்; வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும்.
காலையில் எழுந்தவுடன் பசுவை பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக பழுப்பு நிறத்தில் இருக்கும் கபிலைப்பசுவை வெள்ளிக்கிழமைகளில் பார்த்தால் செல்வம் அதிகமாகும். குபேரனின் அருள் கிடைக்கும்.
ஒவ்வொரு அமாவாசைக்குப் பிறகும் மூன்றாம் பிறை நாள் விசேஷமானது. அந்த நாளில் இரவு வருவதற்கு முன்னதாகவே இந்தப் பிறை தோன்றும். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவபெருமான் தன்னுடைய தலை முடியின் மேல் வைத்திருக்கிறார். பிரதி மாதம் இந்த மூன்றாம் பிறையைத் தரிசித்தால் மனக்கஷ்டம் நீங்கும்.
கருட தரிசனத்தை காணும் போது முன் ஜென்ம வினைகள் நீங்கும். ஞாயிறன்று கருட தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். திங்கட்கிழமை கருட தரிசனம் செய்தால் குடும்ப நலம் பெருகும். தினமும் அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும்.
மாலை நேரங்களில் கூடு திரும்பும் பறவைக் கூட்டத்தை தரிசித்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். அந்தப் பறவை கூட்டத்தை பார்க்கும்போது நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அந்தக் காரியம் வெற்றியடையும். இது போன்ற ஒரு தருணத்தில்தான் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு தெய்வீக அருள் கிடைத்தது.
சீர்மேவும் குரு பாதத்தை சிந்தையில் வைத்தாருக்கு குறை ஒன்றுமில்லை என்பார்கள். குரு மார்களின் பாதத்தை தினமும் தரிசித்தால் நம்முடைய பிரச்சனைகள் நீங்கும். பெருமாளின் பாதத்தை வணங்குவது மரபாக உள்ளது. எந்தத் தெய்வத்தையும் முதலில் பாதத்தை பார்த்த பிறகே வழிபட ஆரம்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் சமுத்திர தரிசனம் செய்தால் சந்திரனின் பலம் அதிகரிக்கும். இது மனதில் உள்ள சங்கடங்கள் நீங்க உதவும். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் மகாசமுத்திர தரிசனமும் தீர்த்த ஆரத்தியும் நடைபெறும். அதில் கலந்துகொள்ளும்போது சங்கடங்கள் நீங்கி வெற்றிமேல் வெற்றி நமக்கு வந்து சேரும். நான் மேற்சொன்னவற்றை தரிசனம் செய்து அனைவரும் பலன் பெறுங்கள்".