சிவபெருமான் ஜோதியாய்த் தோன்றி சிவலிங்கரூபமாய் கோவில் கொண்ட தலங்கள் ஜோதிர்லிங்கத் தலங்கள் எனப்படுகின்றன. மொத்தம் 64 ஜோதிர்லிங்கங்கள் உண்டென்பர். அவற்றுள் முக்கியமானவை பன்னிரண்டு. அவற்றிலொன்று தானே தோன்றிய ஓங்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கம்.யமுனையில் 15 நாள் நீராடிய பயன், கங்கையில் ஏழு நாள் நீராடிய பயன் நர்மதையைப் பார்த்தாலே கிடைக்கும் என்பர். அத்தகைய நர்மதையில் "ஓம்' போன்ற வடிவில் ஒரு தீவுப்பகுதி உள்ளது. இது மந்தாதா, சிவபுரி என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் ஓங்காரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.மந்தாதா என்னும் மன்னன் நர்மதைக் கரையில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான்.அவனுக்குக் காட்சிகொடுத்த சிவன், அவன் கோரிக்கையையேற்று இங்கே எழுந்தருளினாராம். அந்த மன்னன் பெயரால் இப்பகுதி மந்தாதா எனப்படுகிறது.தேவி அகல்யாபாய் போல்கர் என்னும் சிவபக்தை, தினமும் களிமண்ணில் 18,000 சிவலிங்கங்கள் செய்து அதை நதியில் விடுவாராம். அவை மிதந்து செல்லுமாம். அத்தகைய சக்தி வாய்ந்த தலமாக இது விளங்குகிறது.
நர்மதைக் கரையில் மல்லேஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து படகுகள் மூலமோ பாலத்தின் வழியாகவோ தீவுக்குச் செல்லலாம். அங்கே நர்மதையில் நீராடிவிட்டு ஆலய தரிசனம் செய்யலாம். ஆலய வாயில் சிறு குகைபோல இருக்கும். அதற்குள் சென்று ஓங்காரேஸ்வரரை வழிபடலாம். சிவலிங்கத்தின் நான்கு புறமும் அபிஷேக நீர் விழும் அமைப்புள்ளது. பார்வதிதேவி, பஞ்சமுக ஆஞ்சனேயர் விக்ரகங்களும் உள்ளன. முதல் தளத்தில் ஓங்காரேஸ்வரரை தரிசித்துவிட்டு இரண்டாவது தளத்துக்குச் சென்றால் மகாகாளேஸ்வர லிங்கத்தை தரிசிக்கலாம். மூன்றாவது தளத்தில் சித்தநாதேஸ்வரரும், நான்காவது தளத்தில் குப்தேஸ்வரரும், ஐந்தாவது தளத்தில் தவஜேஸ்வரரும் அருள்புரிகின்றனர்.இவ்வாலயத்தைச் சுற்றி மேலும் 12 லிங்கங்கள் உள்ளன. மேலும் மாதா காட் (படித்துறை), சீதா வாடிகா (தோட்டம்), தாவடி குண்ட் (குளம்), மார்க்கண்டேயர் சிற்பம்- ஆசிரமம், அன்னபூரணி ஆசிரமம், அறிவியல்கூடம், படே அனுமன், ஹேடாவதி அனுமன் கோவில்கள், ஓங்கார மடம், மாதா ஆனந்தமயி ஆசிரமம், ரிணமுக்தேஸ்வரர் ஆலயம், காயத்ரி மாதா, மகாவிஷ்ணு, வைஷ்ணவி தேவி, காசிவிஸ்வநாதர் ஆலயங்கள் உட்பட ஏராளமான புனிதத் தலங்களும் தீர்த்தங்களும் இப்பகுதியில் உள்ளன.
இங்கு குபேரன் சிவபெருமானை எண்ணித் தவமிருந்து நவநிதிகளுக்கும் தலைவனான். எனவே குபேரனுக்கும் இங்கு ஆலயம் உள்ளது. சிவனின் ஜடாமுடியிலிருந்து ஒருதுளி நீர் இங்கே விழுந்ததாம்.அது சிற்றாறாக ஓடி நர்மதையுடன் கலக்கிறது. தீபாவளியின்போது குபேரனுக்கு இங்கு மிகச் சிறப்பாகப் பூஜைகள் நடக்கும்.பக்தர்கள் பல்வேறு புனித தீர்த்தங்களிலிருந்து நீர்கொண்டுவந்து ஓங்காரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் எண்ணியவை யாவும் ஈடேறுகின்றன என்பது பக்தர்கள் கூற்று. மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஓங்காரேஸ்வரர் ஆலயம். உஜ்ஜயினியிலிருந்து 142 கிலோமீட்டர், கண்ட்வாவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.