கரூர் முத்துமாரியம்மன் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி, பால்குடம் எடுத்து அலகு குத்தி, பூக்குழி இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி, நாள்தோறும் சுவாமி வீதி உலா உள்ளிட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இன்று அமராவதி ஆற்றிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் மற்றும் அலகு குத்தி கொண்டு முக்கிய வீதிகள் வழியாக அமராவதி ஆற்றில் இருந்து ஆலயம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தில் பகவதி அம்மன் ஆலயம் அருகே தீமிதித்தனர். அதைத் தொடர்ந்து அலகு குத்திக் கொண்டு வந்த பக்தர்கள் ஆலயம் வலம் வந்த பிறகு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.