Skip to main content

சிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள அனைத்து சிவாலயங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் அந்த நாளன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவனுக்குப் பூஜை, அபிஷேகம் செய்வார்கள். தாந்த்ரீகர்கள் தங்களுக்கு பலம் அதிகமாகக் கிடைப்பதற்காக சிறப்புப் பூஜைகள் செய்வார்கள். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டி வர, அவர்களுக்கு உண்மையை  உணர்த்த அடிமுடி காணவியலாத ஜோதிரூபமாய் சிவபெருமான் காட்சிதந்த நாள் சிவராத்திரி.வடஇந்தியாவில் மகாசிவராத்திரி, சிவனின் திருமண நாளாகக் கொண்டாடப்படுகிறது.சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தால் மனிதர்களுக்கு கஷ்டங்கள், பயம் நீங்கும். தேனாபிஷேகம் செய்தால் பணக் கஷ்டம் நீங்கும். கரும்புச்சாறால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வெற்றி கிடைக்கும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

shivan temple

வில்வ இலையை வைத்து மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறியவாறு சிவனுக்கு பூஜை செய்யவேண்டும். இதனால் நோய்கள் குணமாகும். இரவு நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டால் மனக்கஷ்டங்கள், பயம் நீங்கும்.மகாசிவராத்திரியன்று அமைதியாக அமர்ந்து, சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் (நமசிவாய) கூறினால் சிவனருள் கிடைக்கும். காலை, மதியம், மாலை, நள்ளிரவு என எல்லா நேரங்களிலும் சிவனுக்குப் பூஜை செய்பவர்கள் கடந்த பிறவியின் சாபங்களிலிருந்து விடுபடுவார்கள். சிவராத்திரியன்று வில்வ இலையில் ராமருடைய பெயரை எழுதி, ஒவ்வொரு இலையாக சிவலிங்கத்தின்மீது வைத்து வழிபட்டால் அனைத்து கர்மவினைகளும் குறையும். வில்வ இலையில் "ஓம்' என்று எழுதி சிவனை வழிபட்டால் நோய்கள் குணமாகும்.கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சிவனுக்குப் பூஜை செய்தால், பின்னர் நடக்கப்போவதை முன்னரே தெரிந்துகொள்ளும் ஆற்றல் ஒருவருக்குக் கிடைக்கும். சிவனை வழிபடுபவர்கள் மகாசிவராத்திரியன்று விரதம் இருக்க வேண்டும்.

இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். கருப்புநிற ஆடை அணியக்கூடாது. வெளிர் நிறம், வெள்ளை நிறம் கொண்ட ஆடைகளை மட்டுமே அணியவேண்டும். தாமரை மலர் வைத்து சிவனை வணங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். சாமந்திப் பூவால் பூஜை செய்தால் வாக்கு சித்தி கிடைக்கும்- அதாவது அவர்கள் கூறுவது எதுவும் நடக்கும். மல்லிகைப் பூவைவைத்து வழிபட்டால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிவப்பு மலர்களால் பூஜை செய்தால் நோய் குணமாகும். எருக்கம்பூவை வைத்து சிவனை வழிபட்டால் வெற்றிகள் கிடைக்கும். விபூதியால் அபிஷேகம் செய்தால் நோய்கள் குணமாகும். உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியன்று பஸ்ம அபிஷேகம் செய்வார்கள். இதைக் காண்பவர்களுக்கு மரணபயம் நீங்கும்.மகாசிவராத்திரியன்று சிவனை எந்த இடத்திலும் வழிபடலாம். மனதாலும் வழிபடலாம். அப்படி வழிபடுவர்களுக்கு மரணம் பற்றிய பயம் சிறிதும் இருக்காது. லட்சுமியின் அருள் கிடைக்கும். வாழ்வில் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.