ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் சரியில்லையென்றால், அவருடைய முகத்தில் பிரகாசம் இருக்காது. தலையில் முடி சரியாக இருக்காது. சிலரின் தலையில் முடி உதிர்ந்துவிடும். சிலருக்கு வழுக்கை விழுந்துவிடும். அதனால் இளம்வயதிலேயே வயதான மனிதர்களைப்போல காட்சியளிப்பார்கள்.ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, லக்னத்தில் பாவ கிரகத்துடன் இருந்து, புதன் அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவரின் தலையில் முடி குறைவாகவே இருக்கும். இளம்வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும். பொடுகுவரும். ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் இருந்து, அந்த லக்னாதிபதியுடன் சூரியன் இருந்தால், அவருடைய தலையின் முன்பகுதியில் முடி உதிர்ந்துவிடும். லக்னாதிபதி, சூரியன், செவ்வாய் 12-ல் இருந்தால், அவருடைய தலைமுடி சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே இருக்கும். சற்று வயதானபிறகு, பின்பகுதியில் மட்டும் முடி இருக்கும். முன்பகுதியில் வழுக்கை விழுந்துவிடும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதியான சந்திரன் விரய ஸ்தானத்தில் இருந்து, 6-ல் சூரியன் இருந்தால், அவருக்கு நாளாக நாளாக முடி கொட்டிக்கொண்டே இருக்கும். ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாக லக்னத்திலோ விரய ஸ்தானத்திலோ இருந்தால், அவருக்கு சிறிதுசிறிதாக முடி உதிர்ந்துகொண்டேயிருக்கும். லக்னத்தில் சூரியன், புதன், சந்திரன் இருந்து, விரய ஸ்தானாதிபதி 2-ல் இருந்தால், அவருக்கு இளம்வயதிலேயே தலைமுடி கொட்டத் தொடங்கிவிடும். லக்னத்தில் சூரியன், புதன் இருந்து, அதில் புதன் நீசமாக இருந்தாலும், விரய ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தாலும் அவருக்கு இளம்வயதிலேயே முடி உதிரும். ஜாதகத்தில் புதன், செவ்வாய், சனி 6 அல்லது 12-ல் இருந்தால், அவருக்கு வயது ஆக ஆக முடி உதிரும். ஜாதகத்தில் 12-ல் செவ்வாய், லக்னத்தில் சனி, 2-ல் சூரியன் இருந்தாலும் இளம்வயதிலேயே தலைமுடி உதிரும்.
சந்திரனுக்கு 12-ல் சூரியன், புதன், 2-ல் பாவ கிரகம் இருந்தால், அவருக்கு இளம்வயதிலேயே தலைமுடி கொட்டும்.லக்னத்தில் சூரியன், புதன் அல்லது சூரியன், சுக்கிரன், 12-ல் செவ்வாய் இருந்தால், 22 வயதிற்குப் பிறகு தலைமுடி உதிரும். ஏனென்றால், அவர் உணவில் காரம் அதிகமாகச் சேர்த்திருப்பார். அதனால் வயிற்றில் உஷ்ணம் அதிகமாகி தலைமுடி கொட்டும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு 12-ல் சனி- ராகு அல்லது சனி- கேது இருந்தால், அந்த சந்திரனுக்கு 2-ஆவது வீட்டில் செவ்வாய் இருந்தால் இளம்வயதிலேயே தலைமுடி உதிரும். லக்னாதிபதியும், விரய ஸ்தானாதிபதியும் செவ்வாய், சூரியனுடன் இருந்தால் அல்லது செவ்வாய், சூரியனால் பார்க்கப்பட்டால் அவருக்கு தலைமுடி கொட்டும். ஒருவரின் தலைமுடியைப் பார்த்தே அவரின் ஜாதகத்திலிருக்கும் புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலைமையைக் கூறிவிடலாம். இந்த இரு கிரகங்களும் எப்போது கெட்டுப்போயிருக்கின்றனவோ, அப்போது அவருடைய தலைமுடிக்குப் பிரச்சினை உண்டாகிவிடும். ஒரு மனிதரின் வயிற்றில் வெப்பம் அதிகமாக இருந்தால் அவருடைய தலையிலிருந்து முடி உதிரும்.
பரிகாரங்கள்
1.தினமும் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவேண்டும். அல்லது "ப்ரிங்க்ராஜ்' எண்ணெய்யை காலை, இரவு வேளைகளில் தேய்க்கலாம்.
2.உணவில் சூடான பொருட்களைக் குறைக்கவேண்டும். ஊறுகாய், அப்பளம், புளி, காரம் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். இவை பித்தத்தை உண்டாக்கக்கூடியவை.
3.கிழக்கிலோ அல்லது தெற்கிலோ தலைவைத்துப் படுப்பது நல்லது.
4.தினமும் சூரியனுக்கு நீரில் பன்னீர் (ரோஸ் வாட்டர்) கலந்து விடவேண்டும்.
5.பச்சைக்கல் மோதிரம் (மரகதம்) அணிவது நல்லது.
6.ஞாயிற்றுக்கிழமை தலையில் எண்ணெய் தேய்க்கக்கூடாது. முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அல்லது அமாவாசையன்று காகம், நாய், பசுவுக்கு உணவளிக்க வேண்டும்.தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
7.உணவில் தயிர், மோர் சேர்த்துக்கொள்வது அவசியம்.