Skip to main content

உச்சி பிள்ளையார் கோவிலில் ராட்சத கொழுக்கட்டை!

Published on 07/09/2024 | Edited on 07/09/2024
 Giant pudding in Uchi Pillaiyar Temple!

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.இன்றைக்கு விரதம் இருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகம்புல் மாலையிட்டு அவரே கொண்டாடினால் எல்லாவித நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகமாகும். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி மலைக்கோட்டையில் தென்கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோவிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதிகளில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 18 முதல் தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும்.அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி  காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமிக்கு கஜ பூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் ராட்சத கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. இந்த விழாவிற்காக கோவில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி நேற்று 24 மணி நேரத்திற்கு முன்பு சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

பிறகு இந்த கொழுக்கட்டையை இன்று காலை கோவில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். இதில் உச்சிப்பிள்ளையாருக்கும், பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.பிறகு மாணிக்க விநாயகருக்கு உச்சி பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் விநாயகர்ரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பிறகு படையல் செய்யப்பட்ட கொழுக்கட்டை கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த திரளான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையாரை வணங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் மலை உச்சியில் உள்ள படிகளில் பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. இதைத்தவிர மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பல்வேறு வகையான பழ வகைகள், மலர்களால் ஆன பந்தல் மற்றும் வாழைமரங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விழாவில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் இன்று முதல் 14 நாட்கள் சுவாமிக்கு பல்வேறு வகையான அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் 1,175 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி. வருண்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று முதல் மூன்று நாட்கள் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.