Skip to main content

இவனே பிற்காலத்தில் நரகாசுரன்…

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து உலகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவன். அவன் ஒரு சமயம்... மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான். அங்கே அவன் கண்களுக்கு பகவான் தென்படவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தான். அப்போது ஓரிடத்தில் பூமாதேவி தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான்.அவன் கண்களுக்கு உருண்டை வடிவத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதுபோல் தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அவள் அழகாக இருப்பதைக் கண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவளைத் தூக்கிக் கொண்டு பாதாள உலகம் விரைந்தான்.

athivaraha temple

"பகவானே, என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று பூமாதேவி அபயக்குரல் கொடுத்தாள். அந்தக் குரல் மகாவிஷ்ணுவின் காதில் விழுந்தது. பூமாதேவி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம்செய்து, பூமியைத் தன் கோரைப் பற்களால் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். ஸ்ரீவராகராய்க் காட்சிதந்த மகாவிஷ்ணுவை பூமாதேவி அன்புடன் பார்த்து ஆரத்தழுவினார். அதனால் மகிழ்ந்த வராகர் அவளைத் தானும் தழுவினார். இவ்வாறு அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்ட காலம் "தேவவருஷம்' என்கிறது புராணம். இருந்தாலும் அது அந்தி நேரம். அதன் விளைவாக ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பவுமன். இவனே பிற்காலத்தில் நரகாசுரன் ஆனான் என்கிறது புராணம்.வராகப்பெருமாளுக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் உள்ளன. வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதியும் உண்டு.

அந்த வகையில் கும்பகோணத்தில் ஆதிவராகர் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் மகாமகம் உண்டாவதற்குக் காரணமான பிரளய காலத்திற்கு முன்பாகவே இவர் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே, இவரை "ஆதிவராகர்' என்று போற்றுகின்றனர். இவரே இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்திருத்தலத்து ஆதிவராகமூர்த்தி ஆகிய ஐவரும் காவேரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர். இங்கு, மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி வராகரை வணங்கியபடி காட்சி தருகிறாள். வீடு, நிலம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அது தீருவதாக நம்பிக்கை. கோரைக்கிழங்கைப் பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை, நெய் கலந்து உருண்டையாகப் பிடித்து சுவாமிக்கு அமுதாகப் படைப்பது வழக்கம். இதனை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர். இங்கு சுவாமி அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்ற கோலத்தில் தனது இடது பாதத்தை ஆதி சேஷன்மீது வைத்தபடி காட்சி தருகிறார்.
 

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.