தமிழ்நாட்டில் கோடை விடுமுறை மாணவர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் கிராமங்களில் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை. கலை நிகழ்ச்சிகள், பால் குடம், காவடி, தேரோட்டம், தீர்த்தம் (மஞ்சள் நீரூற்று), தெப்பம், ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கை, கிடாக்கறி விருந்து எனக் கிராமங்கள் விழாக் கோலங்களில் ஜொலிக்கிறது. பகலில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் இரவில் திருவிழா கொண்டாட்டங்களால் வெயிலை மறந்து போகிறார்கள். அதிலும் பல வருடங்களாக நடக்காத திருவிழாக்கள் இப்போது நடப்பதில் அந்த கிராம மக்களும் இளைஞர்களும் பேரானந்தமாக உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. கேட்ட வரங்களைக் கேட்டவுடன் கொடுக்கும் அம்மனாக பெயர் பெற்றதால் அரசியல் பிரபலங்கள் கூட அடிக்கடி வந்து செல்லும் தலமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 12 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் அலங்கார ஆராதனைகளுடன் மலர் அலங்கார வாகனங்களில் வீதி உலாவும், வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் பால் குடம் எடுத்து தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்தது. தொடர்ந்து 22 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை நடந்த தீர்த்த திருவிழாவில் மாமன் மச்சான்கள் மஞ்சள் தண்ணீரைத் தெளித்து உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக இருக்க பெண்கள் மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வலமாக வந்து தீர்த்த ஊரணியில் அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி குளிர்வித்தனர். 24 ஆம் தேதி புதன் கிழமை இரவு தெப்பக் குளத்தில் மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பச்சைப் பட்டுடுத்தி அம்மன் வீற்றிருக்க இளைஞர்கள் தண்ணீரில் இறங்கி இழுத்துச் செல்ல தெப்பத் திருவிழாவும் நடந்தது.
கோடைக் காலத் திருவிழாக்கள் குறித்து கிராமப் பெரியவர்கள் கூறும்போது, தமிழர்களின் எந்த ஒரு விழாக்களும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கோடை தொடங்கும் போது விவசாயம் இருக்காது. விவசாயிகளுக்கு நேரம் போகாது. வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் வெக்கை அதிகமாக இருக்கும் வீட்டில் தூங்க முடியாது. அதனால் வேனல் காலத்தில் திருவிழாக்களை நடத்தி கலைநிகழ்ச்சிகள் வைத்து மகிழ்ந்தனர். அம்மனுக்காக பொங்கல் வைத்தாலும் உறவுகளுக்கு விருந்து வைக்க கிடா வெட்டி உணவளித்து உபசரித்தனர். வேனல் கால நோய்களில் இருந்த தற்காத்துக் கொள்ள தீர்த்தம் (மஞ்சள் நீரூற்று) திருவிழாக்களை நடத்தி மாமன் மச்சான் உறவுகள் மாறி மாறி மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொள்வதால் கிருமி அழிந்து நோய்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டனர். இப்படி நம் முன்னோர்களின் விழாக்கள் அர்த்தங்கள் நிறைந்ததாகவே உள்ளது என்றனர்.